எனக்கு பதவி ஆசை இல்லை – ரஜினி பரபரப்பு பேச்சு

0
17

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக அவரது ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சுமார் 1 கோடி தொண்டர்களை இலக்கு வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது.

இதற்கிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி புதிய கட்சி தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் சற்று சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியதால் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் தனது கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

புதிய கட்சி தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானதால் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி தெளிவாக மக்களுக்கு அறிவிக்க ரஜினி முடிவு செய்தார்.

இந்நிலையில் ரஜினி நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.

ரஜினி தனது திட்டங்கள் குறித்து அறிவுப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து ஒரு வி‌ஷயத்தில் எனக்கு அதிருப்தி, தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என்று கூறினேன். அது பல ஊகங்களை உண்டாக்கியது.

பத்திரிகை, ஊடகங்களில் பல்வேறு வி‌ஷயங்கள் வெளியாகின. ஆனால் என்னுடைய மாவட்ட செயலாளர்களிடம் இருந்து எதுவுமே வெளியாகவில்லை. அதற்கு முதலில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த சந்திப்பு. அத்துடன் என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு கண்ணோட்டமாக தான் இந்த சந்திப்பு.

நான் கட்சி தொடங்குவதற்கு முன்பே இதை சொல்லிவிட்டால் எல்லோருக்கும் ஒரு தெளிவு வரும். எனக்கும் இதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

1996 இலிருந்து 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறேன் என்று எழுதுகிறார்கள். ஆனால் நான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ந்தேதி தான். நான் அதற்கு முன்பு அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது கிடையாது. அரசியல் வருகை குறித்து கேட்டால் கூட அது ஆண்டவன் கையில் என்றுதான் சொல்லிவந்தேன். எனவே இனிமேல் அந்த வரிகளை எழுதவேண்டாம்.

1996 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக என்னுடைய பெயர் அரசியலில் இழுக்கப்பட்டது. நான் மிகவும் போற்றும் பெரியவர் கலைஞர் அவர்கள், மூப்பனார் அவர்களுக்காக குரல் கொடுத்தேன். சோ அவர்களுடன் பேசி பழகும்போது ஒருவேளை நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்படிப்பட்ட அரசியலாக இருக்கும் என்று யோசித்து வந்தேன்.

அதன் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு இங்கே அரசியலில், ஆட்சியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டது. எந்த சூழ்நிலையிலும் ஆட்சி கவிழலாம் என்ற நிலை இருந்தபோது என்னை வாழவைத்த தெய்வங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று முதன்முதலாக அறிவித்தேன்.

அப்போதே சிஸ்டம் கெட்டு போய் இருக்கிறது. அதை சரி செய்யவேண்டும். மக்கள் மனதில் முதலில் மாற்றத்தை உண்டாக்கவேண்டும் என்று கூறினேன். சிஸ்டத்தை சரி செய்யாமல், மக்கள் மனதை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் அது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைத்தது போல் தான் இருக்கும்.

அதற்காக முதலில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு நான் முக்கியமாக 3 திட்டங்கள் வைத்திருந்தேன். முதலில் நான் கவனித்ததில் இங்கே 2 பெரிய கட்சிகள் தி.மு.க., அதிமுக. அந்த கட்சிகளில் பல்வேறு நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

அந்த கட்சியில் நான் கவனித்த வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன. அவை தேர்தல் நேரத்தில் தேவை. அவற்றின் மூலம் வாக்குகள் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் அவர்களின் பணி தேவை. தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் தேவையில்லை.

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் ஆளுங்கட்சி ஆட்கள் என்று எல்லாவகையிலும் ஊழல், முறைகேடுகள் நடக்கும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பணமும் செல்லாமல் தடுக்கிறார்கள். அது மக்கள், கட்சி, ஆட்சி மூன்றுக்குமே கெட்டது.

சிலர் கட்சி பதவியையே தொழிலாக வைத்துள்ளார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்திற்கு எவ்வளவு பதவிகள் தேவையோ அவை உருவாக்கப்பட்டு பின்னர் தேர்தல் முடிந்த பிறகு கட்சியை நடத்துவதற்கு அத்தியாவசிய பதவிகள் எத்தனை தேவையோ அத்தனையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி பதவிகளை கலைத்துவிடவேண்டும். வீட்டில் விசே‌ஷங்கள் செய்யும்போது நமக்கு வேலையாட்கள் தேவை.

பண்டிகை, விசே‌ஷம் முடிந்த பின்னர் அவர்கள் தேவையில்லை. விசே‌ஷம் முடிந்த பிறகும் அவர்களை வீட்டிலேயேவா வைத்துக்கொள்கிறோம். அனுப்பி விடுகிறோம் அல்லவா… அது போலத் தான். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பேரை மட்டுமே பதவிகளில் வைத்துக்கொள்ள போகிறோம்.

இரண்டாவது சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால் எல்லோருமே 55 வயதுக்கு மேற்பட்டோர் தான் இருக்கிறார்கள். 50 வயதுக்குட்பட்டோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வருவதே இல்லை. சாக்கடை என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

அவர்கள் எளிதாக கட்சிக்குள் நுழைந்து பதவிகளுக்கு வர முடியாது. அப்படி பதவிக்கு வரவேண்டும் என்றால் அவர்கள் வாரிசுகளாக இருக்கவேண்டும். ஆனால் எனது கட்சியில் 60-65 சதவீதம் பேர் இளைஞர்களாகவும் புதியவர்களாகவும் இருப்பார்கள்.

ஓரளவுக்கு படித்தவர்களாகவும் அவர்களது பகுதிகளில் நல்லவர் என்று பெயர் எடுத்தவர்கள், மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களை தேர்ந்தெடுப்போம். மீதம் இருக்கும் 30-35 சதவீதம் பிற கட்சிகளில் இருக்கும் நல்லவர்களை சேர்த்துக்கொள்வேன்.

மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்ற நேர்மையான அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் ஆபிசர்கள் போன்றவர்களையும் கட்சிக்கு நானே நேரடியாக சென்று அழைப்பு விடுத்து சேர்ப்பேன்.

இப்படி ஒரு புது சக்தி சட்டமன்றத்துக்குள் சென்று ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும். அதற்கு ரஜினி ஒரு பாலமாக இருப்பேன். இத்தனை ஆண்டுகளில் நான் சம்பாதித்த புகழ், அன்பு, நம்பிக்கை இவை இதற்கு உதவும் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here