ஓ மை கடவுளே திரைவிமர்சனம்

0
51

சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

வாலிபம் வந்த பின்பும் இவர்களின் நட்பு தொடர்கிறது. நண்பனாக இருக்கும் அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என கருதும் ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார்.

அசோக் செல்வனும் தயக்கத்துடன் அதற்கு சம்மதிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த சூழலில் அசோக் செல்வனின் சின்ன வயது சினேகிதியான வாணி போஜன் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்.

அசோக் செல்வனை விட இரண்டு வயது மூத்தவர் வாணி போஜன். அசோக் செல்வனும் வாணி போஜனும் நெருங்கி பழகுவது ரித்திகா சிங்கிற்கு பிடிக்கவில்லை.

இதனால் அடிக்கடி அசோக் செல்வனுடன் சண்டை போடும் ரித்திகா சிங், ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மன உளைச்சலில் இருக்கும் அசோக் செல்வன் முன்பு விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கடவுளாக ஆஜராகிறார்கள். உனக்கு இன்னொரு வாழ்க்கையை தருகிறோம், இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என கூறுகிறார்கள்.

அந்த வாழ்க்கையில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் பழகி வரும் அசோக் செல்வன், இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? என்பதே மீதிக்கதை.

அசோக் செல்வன், இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

குறும்பான நண்பராகவும், ஜாலியான கணவராகவும் படம் முழுக்க வருகிறார்.

ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் அசோக் செல்வனுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

ரித்திகா சிங், நண்பராக இருக்கும் போது வெகுளியாக இருப்பவர், மனைவியான பின் கணவரை சந்தேகப்படும் காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார்.

வாணி போஜன், காதல் தேவதையாக வருகிறார். அவர் வருகிற காட்சிகள் எல்லாமே வசீகரிக்கின்றன. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடவுள்களாக வரும் விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியிருக்கின்றனர்.

‌ஷாரா, ஒரு நண்பனுக்கே உரிய கடமைகளை தவறாமல் செய்திருக்கிறார். ஆங்காங்கே அவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடி சிரிக்க வைக்கிறது.
படத்தின் முதல் பாதி காதலும், மோதலுமாக கடந்து போகிறது. இரண்டாவது பாதியில், ஆரம்பம் முதல் இறுதிவரை கவித்துவமான காட்சிகள்.

ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி கைதட்ட வைக்கிறார், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

லியோன் ஜேம்சின் பின்னணி இசை படத்திற்கு புத்துயிர் தருகிறது.

விது அய்யண்ணா ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here