கென்னடி கிளப் திரைவிமர்சனம்

0
22

சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார், பாரதிராஜா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கிறது கென்னடி கிளப் திரைப்படம். ட்ரைலர் பார்த்தபோதே புரிந்திருக்கும் அது முழுக்க முழுக்க கபடி பற்றிய படம் என்று. பெண்களை மையப்படுத்தி பல படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரும் நிலையில், இந்த படம் எப்படி? வாருங்கள் பார்ப்போம்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் கென்னடி கிளப் என்கிற கபடி கிளப் நடத்திவருகிறார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பாரதிராஜா. பெண்களுக்கு பயிற்சி கொடுத்து. அவர்கள் ஜெயித்தால் வறுமை ஒழியும் என்கிற நோக்கத்தில் அவர் இதை செய்து வருகிறார்.

ஒரு சமயத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை பாரதிராஜாவின் முன்னாள் மாணவர் சசிக்குமார் ஏற்றுக்கொள்கிறார்.

அவர்கள் கிளப்பில் இருந்து ஒரு பெண்ணும் தேசிய அணியில் விளையாட தேர்வாகிறார். ஆனால் அவருக்கு அப்போது ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதனால் அவர் மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். இந்த பிரச்சனைகளை தாண்டி கென்னடி கிளப் ஜெயித்ததா என்பது தான் மீதி கதை.

தன்னுடைய முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் கிராமத்தினர் விளையாடும் கபடியை எந்த பில்டப்பும் இல்லாமல் நேச்சுரலாக பதிவு செய்திருந்தார் சுசீந்திரன். அது போலவே கென்னடி கிளப்பிலும் நேர்த்தியாக தன் பணியை செய்துள்ளார் இயக்குனர். விளையாட்டு துறையில் உள்ள அரசியல் பற்றியும், பணம் எப்படி இதிலும் விளையாடுகிறது என்பது பற்றியும் தெளிவாக திரையில் காட்டியுள்ளனர்.

பாரதிராஜாவின் நடிப்பில் எதார்த்தம் இருந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் அதிகம் அழுத்தம் இல்லை. சசிக்குமார் தன் ரோலை கச்சிதமாக நடித்துள்ளார்.

கபடி வீராங்கனைகளாக உண்மையாக கபடி விளையாடும் வீராங்கனைகளையே தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.
ஒளிப்பதிவு நம்மை கபடி அரங்கிற்கே கூட்டி செல்லும் அளவுக்கு கச்சிதமாக இருந்தது, மற்றும் டி.இமானின் இசை படத்தின் பரபரப்பான காட்சிகளில் அதிகம் உதவியுள்ளது.

மொத்தத்தில் பெண்களை ஊக்குவிக்கும் கென்னடி கிளப், எதிர்பார்ப்பில்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 3/5

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here