சில்லுகருப்பட்டி திரைவிமர்சனம்

0
116

தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும்.

சில்லு கருப்பட்டி படத்தை பொருத்தமட்டில் 4 வெவ்வேறு கதைகள் நகர்ந்தாலும் அந்த நான்கிலும் மையப்பொருள் ஒன்று தான்.

ஆனால் வயதுக்கு தகுந்தாற்போல் அது மாறுபடுகிறது. அழகிய கவிதை போன்ற ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் ஹலிதா ஷமீம்.

சிறுகதைகள், கவிதைகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

ராகுல் குப்பத்தை சேர்ந்த பையன். மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குவது அவனுக்கும் அவனது நண்பர்களுக்குமான பொழுதுபோக்கு.

நீல நிற பை ஒன்றில் கிடைக்கும் பொருள்கள் அவனுக்குள் இருக்கும் மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன. தினமும் வரும் அந்த பையை பின் தொடர்கிறான். எதற்காக அதை பின் தொடர்கிறான்? அவனுடைய தேடல் முழுமை பெற்றதா? என்பது ப்ளுபேக் குறும்படம்.

பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி, காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன.

காக்கா கடி கதை: மணிகண்டன் – நிவேத்திதாவுடையது. மணியின் திருமணத்துக்கு நாள் குறித்து இருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு நோய் உண்டாகிறது. சின்ன பிரச்சினையாக தொடங்கும் அது கேன்சராக உருவெடுக்க திருமணம் நின்றுபோகிறது.

சோகமே உருவாய் மாறும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேத்திதாவின் நட்பு ஆறுதலாக மாறுகிறது. அதுவே அம்மாவின் அரவணைப்பாக மாறுவது அழகான கவிதை.

நிவேத்திதா – மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும் நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.

டர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும் லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம். தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.

ஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டுகொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார்? கனி எப்படி மாறினார்? என்பதே அம்முவின் கதை.

பால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின் ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது. பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன் ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம்.

நான்குமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர் மல்க, உணர வைக்கின்றன.

பிரபலங்களை நம்பாமல் ஹலீதா தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை வழங்கி இருக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here