கதை தம்மாத்துண்டு! ஆனால் ஒவ்வொரு ஷாட்டும் மிரட்டும் வெடிகுண்டு.
பண்டி சரோஜ்குமார் என்ற இளைஞர் இயக்கியிருக்கிறார். புது ரூட்டை காட்ட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கிறது இவருக்கு. ஆனால் அதுவே கொஞ்சம் ஓவராகி...? போகட்டும் விடுங்கள். வரவேற்க வேண்டிய புது வரவு.
அரையிருட்டு. யாரோ யாரையோ முறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கையில் ஒரு வினோத கைத்தடியுடன் வரும் வயசான அரவாணி உட்பட அத்தனை பேரும் ரத்தவெறி பிடித்து அலைகிறார்கள். இந்த ரத்த ஆற்றில் காகித கப்பல் மாதிரி அழகான காதல் ஒன்றும் மிதந்து வருகிறது. அதுதான் கதையையும் நகர்த்தி செல்கிறது.
தனக்கு பிடிக்காத யாரையும் எமலோகம் அனுப்பி வைக்கிற வில்லன் சம்பத்துக்கு ஸ்மிதா மீது காதல். கட்டாய கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறார். அவரோ தப்பி ஓடி அடைக்கலம் ஆகிற இடம் ஹீரோ கிஷோரின் ஜீப். (இதில்தான் பெரும்பாலும் குடித்தனம் நடத்துகிறார் கிஷோர்) விரட்டி வரும் தடியன்களை நசுக்கிப் போடுகிற இவர் மீது ஸ்மிதாவுக்கு காதல் வருகிறது. ஆனால் இந்த காதலை ஏற்காத கிஷோர் அவரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். திருடன் கையில் சாவியை ஒப்படைத்த மாதிரி, அவர்களே உரிய இடத்தில் ஸ்மிதாவை சேர்க்கிறார்கள். கதறும் காதலியை உதற முடியாமல் தவிக்கும் கிஷோர் மீட்பு பணியில் இறங்க வாளி வாளியாக ரத்தம் இறைக்கிறார்கள் ஸ்கிரீனில். முடிவும், அதற்கு முன்பான கிஷோர் குறித்த ட்விஸ்டும் யம்மாடியோவ்...!
எந்நேரமும் உம்மணாம் மூஞ்சியாகவே இருக்கிறார் கிஷோர். நிமிடத்திற்கு 300 மெகா வாட் மின்சாரத்தை கக்குகிறது இவரது கோபம். "அந்த சாப்பாட்டை எடுத்து வை" என்பதை கூட, நடுங்க வைக்கிற குரலில்தான் சொல்கிறார். தனது முக்கியமான குறை ஒன்றை இவர் யாருக்கும் தெரியாமல் மெயின்டெய்ன் செய்வதே பெரிய சுவாரஸ்யம். அட, நமக்கே இடைவேளைக்கு முன்புதான் தெரிகிறது. பலே.
தமிழ்சினிமாவின் டிபிக்கல் வில்லன் சம்பத். அரையிருட்டில் ஆள் வேறு மாதிரியாக தெரிவதால் கொஞ்சம் புதுசாக தெரிகிறார். க்ளைமாக்ஸ் வழக்கமான சூறை தேங்காயாக இருந்தாலும், சம்பத்தின் சாவு சந்தோஷத்தை தர தவறவில்லை.
கதாநாயகி ஸ்மிதா உப்பும் இனிப்புமாக ஃபிப்டி ஃபிப்டி! தன்னை காப்பாற்ற முன் வந்த சத்யன் கண்ணெதிரே இறந்து போகையில் அண்ணா அண்ணா என்று அலறுகிறாரே, காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது. சத்யனுக்கும் பெயர் சொல்கிற மாதிரி ஒரு படம். கிளிக்குரலை விட்டிருக்கிறார். அதுவே பெரும் நிம்மதி.
மூன்று ஒளிப்பதிவாளர்கள். முறையே மகேந்திரன், தேவா, தேவராஜ். மூவருமே பாராட்டுக்குரியவர்கள். ஒருவித அமானுஷ்ய டோன் விரவிக்கிடக்கிறது படமெங்கும். அதுதான் ப்ளஸ். காட்சியமைப்பு என்ற கூடுதல் வேலையையும் கவனித்திருக்கிறார் இயக்குனர் பண்டி சரோஜ்குமார். மற்றவற்றை காட்டிலும் இது மிரட்டல்.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகளில் அதிரி புதிரியான ஆவேசம். வெல்டன் வாத்தியார்... ரோஹித் குல்கர்னி இசையில் முன்னணி, பின்னணி இரண்டுமே அசத்தல்!
மண்ணுக்குள்ளிருந்து தோண்டியெடுத்த மாதிரி ஒரு ஊர். அதில் அழுக்கழுக்காக மனிதர்கள். இருட்டிலேயே கதை நகர்வதால் ‘நிழல்’ உலக தாதாக்களின் கதைன்னு தைரியமா சொல்லிக்கலாம் இயக்குனர்.
நாலு நாள் காய வைத்த சப்பாத்தியை பசி நேரத்தில் உள்ளே தள்ளிய மாதிரி எக்குதப்பான ஒரு நிம்மதி வருது தியேட்டரை விட்டு வெளியே வரும்போது!
-ஆர்.எஸ்.அந்தணன் |