கோடம்பாக்கத்திற்கு இது 'கலகலப்பு' சீசனல்லவா? ரீசனே இல்லாட்டியும் கூட ரசிகர்கள் சிரிக்கணும். அது போதும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. துவக்கத்திலிருந்து இறுதிவரை டைரக்டர் அஸ்லாமின் உருவாக்கத்தில் ஏராளமான சீன்கள் காமெடி சரவெடி.
சுயதொழில் செய்ய ஆசைப்படும் நண்பர்கள் ஸ்ரீகாந்த், பரோட்டா சூரி, பாண்டி ஆகிய மூவருக்கும் யாரையாவது 'லபக்கி' தொழிலில் முதலீடு செய்வதுதான் தொழிலே. இவர்களது அத்தனை முயற்சியும் அப்பளமாக நொறுங்கிப் போக, வசதியா ஒரு பொண்ணு கிடைச்சா வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாமே என்கிற இறுதி முடிவுக்கு வருகிறார் ஸ்ரீகாந்த்.
வேதாளம் ஏறி, முருங்கை மரமே நொறுங்கிப் போன மாதிரி அவரது ஆசை படீர் திடீர் ஆகிறது ஒருகட்டத்தில். சொந்த கல்லு£ரி, சொகுசு பங்களா எல்லாவற்றையும் விட்டு விட்டு கட்டிய சுடிதாரோடு ஸ்ரீகாந்த் வீட்டு கதவை தட்டுகிறார் காதலி ஜனனி அய்யர்.
'துட்டோட மஹாலட்சுமி வரும்னு பார்த்தா இப்படி தொந்தரவு வந்துருச்சே' என்று அதிரும் ஸ்ரீகாந்த், காதலி ஜனனி அய்யருக்கு பேக்கப் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார். கையில் தாலியோடும் கண் நிறைய கண்ணீரோடும் நிற்கிறார் ஜனனி. வாழ்க்கையில் அவனை இனி பார்க்கவே கூடாது என்ற முடிவோடு ஃபாரினுக்கு படிக்கப் போகும் அவர் பிராக்டிகலுக்காக திருப்பூர் வர, அங்கே பழைய காதலன் ஸ்ரீகாந்த்.
கரன்ஸியை விட காதலே உயர்ந்தது என்ற நினைப்பில் காதலியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் அவர். பழைய காதல் புதுப்பிக்கப்பட்டதா? காதல் கொடி உயரப் பறந்ததா? என்ற கேள்வியோடு க்ளைமாக்ஸ்!
விவேக், வடிவேலு, சந்தானங்கள் இருந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் பாதியை. மீதி பளுதான் ஹீரோவுக்கு. ஆனால் இங்கே பரோட்டா சூரியும், பரிதாப பாண்டியும்தான். வேறு வழியே இல்லாமல் தன் பங்குக்கு காமெடியில் கரை தாண்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த். நினைத்தால் தனுஷைவிட இளைக்க முடியும். பொன்னம்பலத்தை விட பெருக்க முடியும் என்பார் போலிருக்கிறது இவர். இந்த படத்தில் ஒரு ப்ளஸ் டூ தாண்டிய மாணவன் லெவலுக்கு இருக்கிறது ஸ்ரீகாந்தின் அளவும் அழகும்.
ஹீரோவுக்கு இமேஜ் முக்கியம். படம் ஹிட்டாக வேண்டுமெனில் அதை கூட சற்று ஒதுக்கி வைக்கலாம் என்பதற்கு ஸ்ரீகாந்தின் பொறுமையே சாட்சி. ஒரு காட்சியில் இவரை பார்த்து 'செருப்பு பிஞ்சுரும்' என்கிறார் ஜனனி.
பாலா கொடுக்காத பரவசத்தை அஸ்லாம் கொடுத்திருக்கிறார் ஜனனி அய்யருக்கு. ஒரு ஹீரோயின் முறைப்படி எப்படி அறிமுகம் ஆகவேண்டுமோ, அப்படியெல்லாம் அறிமுகமாகி... அப்படியெல்லாம் சிரிப்பால் கொல்கிறார் ஜனனி. இனிமே ரூட்டு கிளியர்மா...
பெருத்த ஆச்சர்யம் என்னவென்றால் பரோட்டா சூரியை கூட நம்மால் ரசிக்க முடிகிறது. இவர்களின் கிச்சுகிச்சுக்கே தியேட்டர் மொத்தமும் தாங்க முடியாமல் சிரிக்க, கோவை சரளாவும் சேர்ந்து கொள்கிறாரா? குலுங்குகிறது ஏரியா.
கவரிங் வளையலை அம்மாவுக்கு கொடுத்து விட்டு தங்க வளையலை பிடுங்கிக் கொண்டு போகும் ஸ்ரீகாந்த் அண் கோ, அடுத்த சீனில் கோழிப் பண்ணைக்கு ஓனராகிறார்கள். அடுத்த காட்சியிலேயே விதி கோழி சீக்கு ரூபத்தில் வருகிறது. இப்படி முதல் பாதியில் இடைவேளை வரை விடாமல் சிரிக்க வைக்கும் இந்த கோஷ்டி காதல் துரத்தல் என்று ஷிப்ட் ஆகி, இடைவேளைக்கு பின் 'ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்' ஆகிப் போகிறது.
நல்லவேளை... அதே திருப்பூரில் மீண்டும் கூட்டணியாக திரிகிறார்கள் ஸ்ரீகாந்த், பரோட்டா சூரி, பாண்டி மூவரும். அதனால் தப்பியது ரெண்டாம் பாதி. 'ஏண்டா... உலகத்துக்கே இங்கேயிருந்துதான் ஜட்டி சப்ளை பண்ணுறாங்க. இவ்ளோ பெரிய ஓட்டை ஜட்டிய போட்டு திருப்பூரையே கேவலப்படுத்துறீயே' என்ற சூரியின் ஜோக்குக்கு ரூம் போட்டே சிரிக்கலாம்.
'காஞ்சனா'வுக்கு பிறகு கோவை சரளாவின் சரவெடி சாம்ராஜ்யம் இப்படத்தில்தான். மருமகளுக்கு கொடுத்த வரவேற்பை அடுத்த நிமிடமே மாற்றிக் கொள்ளும் இவரது சேட்டை செம அழகு.
சிங்கப்பூர்ல போய் 'ஹோட்டல் திருப்பூர்'னு வைக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னை திருப்பூர்ல வந்து 'ஹோட்டல் சிங்கப்பூர்'னு வைக்க விட்டுட்டியே என்று அலறும் அனுமோகனும் ஆங்காங்கே சிரிப்பு மூட்டுகிறார்.
மியூசிக் ஜேம்ஸ் வசந்தன். யாருக்கும் புரியாத 'சிம்பா சம்பா ரம்பா' பாடல் பிளேஸ்மென்ட் தப்பு என்றாலும் முணுமுணுக்க ரைட்!
படத்தில் ஹீரோ சுப்ரமணியின் சைக்கிள்தான் இந்த கதையை சொல்கிறது. ஒரு கமர்ஷியல் கதையில் சிறுகதையின் தாக்கத்தோடு சொல்லப்பட்டிருக்கும் இந்த யுக்தி புதுமுக டைரக்டர் அஸ்லாம், அமீரின் மாணவர் என்பதை அழுத்தம் கொடுத்து சொல்வதற்காக வைக்கப்பட்டிருக்கலாம்.
மற்றபடி பாம்பு பெட்டிக்குள் பஞ்சாமிர்த டப்பாவை வைத்த மாதிரி எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான் இந்த பாகன்!
-ஆர்.எஸ்.அந்தணன் |