இலக்கணத்தை மீறுகிற எல்லா விஷயங்களும், பாராட்டப்படுகிறதோ இல்லையோ, பலராலும் கவனிக்கப்படும். அந்த வகையில் இப்படத்திற்கு ஒரு வெல்கம்! ஆனால் கதைக்கு தேவையில்லாத துணுக்குகளையெல்லாம் படமாக்கி துணுக்குற வைத்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணன் சேஷாத்ரி கோமடம்.
விளம்பர படங்களை இயக்கி வரும் ஹயகிரீவனுக்கு ஒரு முழு நீள படத்தை இயக்க வேண்டும் என்பது கனவு. தயாரிப்பாளர்கள் எல்லாம் வெவ்வேறு காரணங்களை சொல்லி இவரை தவிர்க்கிறார்கள். இவரது காதலி சிந்துவுக்கு தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கே உரிய ஏதோ ஒரு வியாதி. மரணத்திற்காக காத்திருக்கும் இவருக்கு, விரைவில் தனது காதலன் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் ஆசை. "எப்படியாவது முயற்சி பண்ணி ஒரு படத்தை இயக்கிவிட்டு வா. கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்கிறார். ஹயகிரீவனின் கனவும், காதலியும் பிழைத்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ். நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டிய திரைக்கதை இந்திய பங்கு சந்தை மாதிரி ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கிறது. அவ்வப்போது ஆஹாவும்... ஆவ்வ்வ்வ்...ம் மாறி மாறி வருவதுதான் பலமும் பலவீனமும்.
புதுமுகம் சி.பி.சத்யஜித்துக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியாது. அந்தளவுக்கு இயல்பான நடிப்பு. குறையன்றுமில்லை பாடலை டேப்பில் போட்டு விட்டு, கூட கூட பாடும் காதலியின் இம்சை தாளாமல் தவிப்பது சுவாரஸ்யம். இவரது முதல் செக்ஸ் அனுபவம் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறது.
காதலியாக நடித்திருக்கிறார் அனுஜா அய்யர். தான் விரைவில் சாகப் போகிறோம் என்பதற்காக அழுது வடியாமல் இருப்பதே அழகு. அவ்வப்போது சொர்க்கத்தில் இருக்கும் அம்மாவிடம் போகிறேன் என்று மிரட்டுவது பரிதாபத்தை தருகிறது. தனது முதல் காதலை நிகழ்கால காதலனிடம் சொல்கிற துணிச்சலும் யதார்த்தமும் இது ஒரு மெட்ரோ பிலிம் என்பதற்கு ஆதாரம். ஆனால், கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையும் அடங்கியதுதானே மெட்ரோ?
கவனத்தை ஈர்க்கிற மற்றொருவர் சரண். நடிப்பில் ஜமாய்த்திருக்கிறார். அசிஸ்டென்டாக சேரும் இவர், தனது இயக்குனருக்கு படம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உயிரையே விடுவது அபத்தம். க்ளைமாக்சில் ஒருவரை சாகடிக்கலாம் என்று ஐடியா கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே? இவர் இறந்ததால்தான் அனுஜா பிழைத்துக் கொள்கிறாராம். என்னய்யா லாஜிக் இது? அந்த கண் தெரியாத தாத்தாவின் அலம்பல்களுக்கு பாராட்டுகள் நிச்சயம்.
கான்வென்ட் ஆங்கிலத்தில் கரைபுரளும் டயலாக்குகள், பல நேரங்களில் இது தமிழ்ப்படம் என்பதையே மறக்கடிக்கிறது. பல்சர் ஓட்டும் அனுஜாவின் டயலாக், ஆங்கிலத்தில் இருப்பதால் தப்பித்தோம். (ஹே இந்த பொண்ணு பைக் ஓட்டுது என்று ஆச்சர்யப்படும் சிக்னல் ஆசாமியிடம், கால் நடுவில் கடினமான ஒன்று இருந்தால் எனக்கு பிடிக்கும் என்கிறார் அனுஜா) செல்போன் வாங்க கடைக்கும் போகும் இளைஞிகளின் எபிசோட் எந்த வகையில் கதையோடு ஒட்டுகிறது என்பது இயக்குனருக்கே வெளிச்சம். இதுபோல் ஒட்டாமல் தத்தளிக்கும் காட்சிகள் நிறைய.
பவுசியாவின் ஒளிப்பதிவு தனது வேலையை மட்டும் கவனமாக கவனித்திருக்கிறது. அஸ்லாம் முஸ்தபாவின் இசையில் பாடல்கள் மேல்தட்டு ரகம். பின்னணி இசை வெல்டன். எல்லா காலங்களிலும் மனசை அள்ளும் 'குறையன்றுமில்லை' பாடல் கேட்க கேட்க சுகம்.
புது முயற்சி, அதுவும் முதல் முயற்சி... ஹ§ம்ம்ம்ம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|