சேரனின் சமீபத்திய சிராய்ப்புகளுக்கு மருந்து போடுகிற மாதிரி அமையுமா அவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜே.கே.எனும் நண்பனின் கதை?' ரசிகர்களின் இந்த பேரார்வ கேள்வியின் மீது அவரே போர்வை போட்டு மூடி விடுவார் போலிருக்கிறது. அதை சொல்வதற்கு முன் இப்படத்தின் மேலதிக விபரங்களை முதலில் பார்ப்போம்.
பொக்கிஷம், முரண் போன்ற படங்கள் கோடம்பாக்கத்தில் சேரனுக்காக வைக்கப்பட்டிருந்த 'பொற்கால' கல்வெட்டையெல்லாம் நோண்டி நோகடித்து விட்டது. இனிமேல் ஹிட் கொடுக்காமல் ஓயப்போவதில்லை என்று சிலிர்த்தெழுந்த சேரன், தனக்கேயுரிய கவித்துவத்தோடு எடுக்க முன் வந்த படம்தான் ஜே.கே. எனும் நண்பனின் கதை. இதில் நித்யா மேனன், சர்வானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். அப்படியே சேரனும் நடிக்கிறார்.
சர்வானந்த், நித்யாமேனன் கால்ஷீட் இருப்பதால் இப்படத்தை தெலுங்கு மொழியிலும் எடுக்கிறாராம். தெலுங்கில் அ-னா ஆ-வன்னா தெரியாத சேரன், இதற்காக ஒரு தெலுங்கு டயலாக் ரைட்டரை நியமித்து தனது எழுத்துக்களுக்கு அம்மொழியில் உயிர் கொடுக்க வைத்திருக்கிறார். இதுவரைக்கும் ஓ.கே. இனிமேல்தான் பிரச்சனையே!
இப்படி அவர் எழுதும் டயலாக்குகளை சரிபார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது யார் தெரியுமா? அப்படத்தின் ஹீரோயினும் மலையாள சேச்சியுமான நித்யாமேனன். தெலுங்கில் நாலைந்து படங்களில் நடித்ததோடு சரி. தெலுங்குக்கும் இவருக்கும் இருக்கிற ஸ்நான பிராப்தி அவ்வளவுதான். இவர் பேச்சை நம்பி தெலுங்கு ரைட்டரை அவ்வப்போது லெப்ட் ரைட் வாங்கினாராம் சேரன்.
பொறுத்து பொறுத்து பார்த்த தெலுங்கு ரைட்டர், இவர் கூட சேர்ந்து கோவக்காய் மெல்லுறதுக்கு ஆந்திராவுல போய் ஆவக்காய் விற்கலாம் என்று கிளம்பிவிட்டார். யாருக்காவது நல்லா மலையாளம் தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கும் தெரிஞ்சா, சேரன் கம்பெனிக்கு தெலுங்கு ரைட்டரா போகலாம்! தைரியம் இருக்கா...?
|