நீங்க சிரிச்சிகிட்டே இருக்கறதாலதான் உங்களுக்கு 'சிரி'தேவின்னு பேரு வச்சாங்களா? சென்னைக்கு வந்திருந்த மயிலு ஸ்ரீதேவிக்கு மங்கள வாத்தியம் இசைத்தார் ஒரு நிருபர். அவ்வளவுதான்... வெட்கத்தை மிக்ஸ் பண்ணி வெள்ளந்தியாக சிரித்த ஸ்ரீதேவி 'ஐய்ய்யய்யோ இப்படியெல்லாமா கேட்பாங்க' என்கிற மாதிரி பார்த்தார் நிருபரை. அப்புறம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் சாவி கொடுத்த மாதிரி அவர் பதில் சொல்லிக் கொண்டே வர, ஒரு கேள்விக்கு மட்டும் விழுந்ததே பிரேக்!
சரி. உங்களை திரையில பார்த்துட்டோம். அந்த மாதிரி உங்க வாரிகளை எப்போ பார்க்கறது? இந்த இடத்தில் மிக கவனமாக பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்ரீதேவி. இப்பதான் நானே பெரிய 'கேப்'புக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். (தொகுப்பாளர் ரம்யா 26 வருடங்கள் என்கிறார். பிலிம்நியூஸ் புலிகள்தான் இதை சரிபார்க்க வேண்டும்) முதல்ல என்னை ரசிங்க. அப்புறம் ரசிக்கலாம் என்னோட வாரிசுகளை...' என்றார் ஸ்ரீதேவி.
நல்ல கதைகள் அமைஞ்சா கண்டிப்பா தமிழ்ல நடிப்பேன்... ரஜினி, கமல் ரெண்டு பேர் கூடவும் நடிக்கலாம். அவங்க கருத்தையும் கேளுங்க... இப்ப வர்ற ஹீரோயின்களை பற்றி நான் என்ன சொல்றது, ரசிகர்கள்தான் சொல்லணும்... இப்படி பட்டும் படாமலும் நழுவிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியை 'சொரேல்' ஆக்கியது பயில்வானின் கேள்வி.
உங்க தங்கச்சி அரசியலுக்கு வந்தாங்க. உங்களுக்கு அப்படியொரு ஆசை இருக்கா? ஜெயப்ரதா, ஹேமமாலினி, ரேகா மாதிரி எம்.பி. சீட் கொடுத்தா ஏத்துப்பீங்களா? இதுதான் கேள்வி.
எனக்கு அதுமாதிரி ஆசையெல்லாம் இல்லைங்க. குழந்தைகளை நல்லபடியா பார்த்து வளர்த்தா போதும். கிடைக்கிற நேரத்தை அவங்க கூட ஸ்பென்ட் பண்ணணும். மிக தீர்மானமாக சொன்னார் ஸ்ரீதேவி.
பேகன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் ஆயிரம் போர்வைகள் கூட போர்த்தியிருப்பார் இந்த புத்திசாலி மயிலுக்கு!
பின்குறிப்பு- மயிலு சென்னைக்கு வந்ததும் பிரஸ்சை மீட் பண்ணியதும் எதற்கு தெரியுமா? அவர் ஹீரோயினாக நடிக்கும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் பிரமோஷன் மீட்டுக்கு. |