ஜெயா தொலைக்காட்சியின் 14 ம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்து கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரானபின் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியல்லவா? நேரு ஸ்டேடியம் ஃபுல். ஏ.வி.எம் சரவணன், பாலசந்தர், இசைஞானி இளையராஜா, ரஜினி, கமல், உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் குவிந்திருந்தார்கள். இத்தனை சினிமா பிரபலங்கள் குவிந்திருந்தும் முதல்வரிடம் கோரிக்கைகள் வைக்காத முதல் விழா என்ற பெயரும் பெருமையும் இந்த விழாவுக்கு உண்டு என்றே சொல்லலாம். அத்தனை பேரும் சினிமாவுலகுக்கான சலுகைகள் குறித்து வாயை திறக்கவே இல்லை.
விழாவில் தமிழ் திரையுலகில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசைக் கச்சேரியும் அவர்களுக்கு பாராட்டுரையும் நடந்தது.
இதுவரை இவர்கள் இருவருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை என்பதை பெரும் குறையாக பேசினார்கள் அத்தனைபேரும். இதற்கெல்லாம் பதிலளித்தார் முதல்வர். அதை சூளுரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. கடந்த வருடமே நான் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தேன். எப்பவுமே தமிழகத்தின் மீது பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு இந்த முறையும் அப்படியே இருந்துவிட்டது. நான் சொன்னால் நடக்கிற காலம் ஒன்று வரும். அப்போது அவர்களுக்கு பத்ம விருதுகள் நிச்சயம் உண்டு என்று சூளுரைத்தார் முதல்வர்.
ஆனால் ஜெயா டி.வி சார்பில் பொதுமக்களிடமிருந்தே பொருத்தமான ஒரு விருதை தந்தார்கள் மெல்லிசை மன்னர்களுக்கு. இதை முதல்வர் தன் கையால் அளித்தார் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும். அதுதான் 'திரையிசை சக்கரவர்த்தி' என்ற விருது!
கொடுத்து கொடுத்தே பழகிய புரட்சித்தலைவரின் வளர்ப்பல்லவா? திரையிசை சக்கரவர்த்திகளுக்கு பொற்காசுகளும், ஃபோர்டு கார்களும் வழங்கி சிறப்பித்தார் முதல்வர் ஜெ.
முக்கிய குறிப்பு- இந்த விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தும் ஆப்சென்ட் ஆன ஒரே நடிகர்.... வடிவேலு! அதே போல் வந்திருந்த பிரபலங்களில் முக்கியமாக கண்ணில் பட்டவர்கள் விஜய்யும் சூர்யாவும். |