தெலுங்குக்கு போய் பாதியிலேயே திரும்பி வந்த டைரக்டர் பூபதி பாண்டியன் மறுபடியும் பிஸியாகிவிட்டார். விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறார் அவர்.
ஆக்ஷன் விஷாலுக்கு திடீரென்று காமெடி மேல் தீராத பற்று வர, அதற்கப்புறம் வந்த படம்தான் தீராத விளையாட்டு பிள்ளை. அதற்கு முன்பு வந்த மலைக்கோட்டையிலும் குலுங்க குலுங்க சிரிப்பு இருந்தது. ஆனால் மலைக்கோட்டை அளவுக்கு தீ.வி.தொல்லை இல்லாமல் போனதால் கொஞ்சம் சீரியஸ் ஆகிவிட்டார் விஷால்.
'கவுண்டமணிதான் என்னோட ஹீரோ' என்று அடிக்கடி கூறும் விஷால் இந்த பாழாப்போன காமெடியை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டே திரிய, மறுபடியும் புரட்சித்தளபதி தோட்டத்தில் பூபதியின் சுவடுகள்.
இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கப் போகிறாராம். கேப்டன் கட்சியில் எம்.எல்.ஏ ஆகிவிட்ட இவர் சட்டசபைக்கு போகலாம் என்று ஆசையோடு இருந்திருப்பார். ஆனால் விஜயகாந்தே அங்கு போவதில்லை. நாம் மட்டும் எதற்கு என்று நினைத்திருக்கலாம். அண்ணனின் பார்வை இப்போது முழு நேரமும் சினிமாதானாம்.
|