|
பாசத்தலைவருக்கு பாராட்டு விழா! கலையுலகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் பல நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் நேரமின்மை காரணமாக இடம் பெறவில்லை. முக்கியமாக கமல் நடிக்கவிருந்த சாக்ரடீஸ் நாடகம். மேடைக்கு முன்புறம் இருந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் தங்கள் நிகழ்ச்சி வருவதற்கு சற்று முன்னர்தான் மேக்கப் போடவே போனார்கள். அப்படி கூட்டத்திலிருந்து எழுந்து போன ஸ்ரேயா கடைசிவரை மேடையில் தோன்றவேயில்லை.
விழாவின் இனிமையான சூழல் அஜீத்தின் பேச்சுக்கு பிறகு மாறியது போல ஒரு தோற்றம். அது நிஜமாகவும் இருக்கலாம். அப்படி என்னதான் பேசினார் அஜீத்?
கலைஞர் 60 வருடங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். சூரியனை வாழ்த்த வயது தேவையில்லை. ஒவ்வொரு பொங்கலின்போதும் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கிறோம். அது போல்தான் இந்த விழா. (இதுவரை துண்டு சீட்டில் எழுதி வைத்த படித்த அஜீத், சீட்டை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்)
ஐயா, கொஞ்ச நாட்களாக உங்களுக்கு எங்க மேல கோபம் இருக்கலாம். ஒவ்வொரு சென்சிடிவான மக்கள் பிரச்சனையின் போதும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கறதுக்கு முன் சினிமாவில் பொறுப்பில் இருக்கும் சிலர் அறிக்கை விடுறாங்க. ஊர்வலம் நடத்துறாங்க. இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கதான் நீங்க இருக்கீங்க. அமைச்சர்களும் இருக்காங்க. அதனால் தன்னிச்சையா செயல்பட வேண்டாம்னு சொல்லுங்க ஐயா.
இந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. அப்படி வராவிட்டால் மிரட்டுறாங்க ஐயா. அல்லது எங்களை தமிழன் இல்லேன்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. இதற்கு நீங்கதான் ஐயா ஒரு முடிவு கட்டணும். நாங்க ரொம்ப டயர்டா ஆகிட்டோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்னு சொல்லுங்க ஐயா...
இவ்வாறு அஜீத் பேச பேச, ரஜினி, சேரன், உள்ளிட்ட பிரபலங்கள் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்தார்கள். தனது உரையை முடிப்பதற்கு முன்பாக "இந்த விழாவுக்கு யாரும் எங்களை கட்டாயப்படுத்தல. நாங்களே விரும்பிதான் வந்தோம்" என்று முடித்தார் அஜீத். |