தமிழ்சினிமாவை மதுரைதான் ஆளுது என்று சொன்னாலும் சொன்னார். அமீரின் வார்த்தைக்கு அழுத்தம் சேர்ப்பது போலவே படத்தின் தலைப்பையும் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய யுரேகா என்பவர், 'மதுரை சம்பவம்' என்ற படத்தை இயக்கப் போகிறார்.
பின் முதுகில் அரிவாளை செருகிக் கொண்டு 'வெட்டு' சேவை நடத்தி வரும் மதுரை ஆசாமிகள் பற்றிய கதைதான் இதுவும். காதல், ஆக்ஷன் போன்ற வழக்கமான சமாச்சாரங்களோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டிய மதுரையை இன்னும் கொஞ்சம் உள்ளே போய் காட்டவிருக்கிறாராம் இயக்குனர்.
தூத்துக்குடி, திருத்தம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஹரிக்குமார்தான் இப்படத்தின் ஹீரோ. வெற்றிப்பட ஜோடிகள் இருந்தால் வியாபாரத்திற்கு பிரச்சனை இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ, தூத்துக்குடி படத்தில் ஹரிக்குமாருடன் இணைந்து கருவாப்பையா பாடலை பாடிய கார்த்திகாதான் இந்த படத்திலும் இவருக்கு ஜோடி.
கிரீடம் படத்தை தயாரித்த சுரேஷ் பாலாஜி இப்படத்தை தயாரிக்கிறார். யுரேகா இதுவரை தமிழ்சினிமாவில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறாராம். இந்த படத்திலும் இவர்தான் பாடல்களை எழுதியிருக்கிறார்.
ஹரிக்குமாரின் முந்தைய படத்தில் கருவாப் பாட்டு. இந்த படத்தில் அருவா பாட்டா?
-வெண்ணிலா |