எட்டுப்பசங்க, ஒரு பொண்ணு! ச்சும்மா ரகளையோ ரகளைங்கிற மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்காங்க. படத்தின் பெயர் பட்டாளம். நதியாதான் ஹீரோயின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக் காணும் காலங்கள் படத்தின் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம், தயாரிப்பாளர் லிங்குசாமியை மணிலிங்க் சாமி ஆக்கிவிடும் போலிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மேற்படி பட்டாளங்களுடன் செம ஜாலியாக நடந்தேறியது.
“தீபாவளி படத்திற்கு பிறகு, அடிச்சா நெத்தியடியா இருக்கிற மாதிரி ஒரு படத்தை தயாரிக்கணும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதான் கனாக் காணும் காலங்கள் சீரியலை விஜய் டி.வியில் பார்த்தேன். உடனடியாக ரோஹனை கூப்பிட்டு இந்த வாய்ப்பை கொடுத்தேன். எதுக்காகவும் காம்பரமைஸ் ஆகக் கூடாது என்பதுதான் என்னுடைய முதல் கண்டிஷனாக இருந்தது. நான் நினைத்ததை விட பல மடங்கு அற்புதமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்” என்றார் லிங்குசாமி.
நாற்பதை கடந்திருப்பாரா? அல்லது இருபதை தொட்டிருப்பாரா என்றெல்லாம் பகீர் பட்டிமன்றம் நடத்த வைத்துவிட்டார் விழாவுக்கு வந்திருந்த நதியா. இவர் பசங்களை பாராட்ட, பசங்க இவரை பாராட்ட... ஒரே சந்தோஷம் விழா மேடையில்.
“இரண்டு கையையும் ஏந்தி நின்ற பிச்சைக்காரனின் கையில் மூன்று வேளை உணவை போட்டு திக்குமுக்காட வைத்தது போல் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார் லிங்குசாமி” என்றார் இப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகியிருக்கும் பத்திரிகையாளர் நெல்லை பாரதி. கலைஞர் போலவும், வைரமுத்து போலவும் இவர் மிமிக்கிரி குரலில் பேச, உற்சாகமாக கவனித்துக் கொண்டிருந்த நதியா, “அவர் என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவரது பேச்சை வரி வரியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது” என்றார்.
லிங்குசாமி சொன்ன இன்னொரு ஒப்பீடு ஏக சுவாரஸ்யமாக இருந்தது. “ரஜினி சாரிடம் ஒருமுறை கேட்டேன். இத்தனை வருடங்களாக நடிச்சிட்டு இருக்கீங்க. இருந்தாலும், அந்த புத்துணர்ச்சி உங்களிடம் குறையவே இல்லையே எப்படி என்று. “ஒவ்வொரு முறை படத்திற்கு தேங்காய் உடைக்கும் போதும், இது கடைசி படமா இருந்திட கூடாதுன்னு உடைப்பேன்”னு சொன்னார். அதே மாதிரி ஒரு புத்துணர்ச்சியை நான் நதியாவிடம் பார்த்தேன். இப்போ கூட அவங்க பக்கத்திலே உட்காரும்போது ஒரு பதற்றம் இருக்கு” என்றார்.
இந்த வார்த்தையை கேட்ட நதியாவின் முகத்தில் வழிந்த வெட்கத்தை பிடித்து சமைஞ்ச பிள்ளைக்கு நலுங்கே வைக்கலாம். அந்தளவுக்கு அதில் குங்குமச் சிவப்பு!
-ஆர்.எஸ்.அந்தணன் |