“சிகப்பு ரோஜாக்கள் என்ற க்ரைம் திரில்லரை கொடுத்தேன். ஆனால், அதில் ஒரு காட்சியில் கூட ரத்தாபிஷேகம் நடத்தவில்லை. அதே போலதான் இந்த பொம்மலாட்டமும்! கத்தியை தண்ணீருக்குள் போட்ட மாதிரி மெல்லிய அதிர்வோடு ஒரு க்ரைம் இருக்கும்” என்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆணானப்பட்ட இவருக்கே படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல். “இத்தனை நாளும் கதையை பற்றியும், இயக்குவது பற்றியுமே சிந்திச்சிட்டு இருந்திட்டேன். படம் எடுப்பதை விட ரிலீஸ் பண்ணுறதுதான் பெரிய வேலையாக இருக்கு” என்றார் வெள்ளந்தியாக. இந்த இக்கட்டான நேரத்தில் இவருக்கு கை கொடுத்திருக்கிறார் நாக்ரவி. தனது இன்சைட் மீடியா சார்பாக தமிழகம் முழுவதும் பொம்மலாட்டத்தை ரிலீஸ் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
“என்னுடைய படங்கள் எல்லாமே கற்பனை கதைகளாகதான் இருக்கும். ஆனால் பொம்மலாட்டம் அப்படியல்ல. ஹம்பியில் நடந்த ஒரு உண்மை சம்பவம். இன்னமும் அந்த குடும்பம் ஹம்பியில் இருக்கிறது. படத்தை பார்க்கிற யாராலும் க்ளைமாக்சை யூகிக்கவே முடியாது. 1984 ல் அர்ஜுன் என்கிட்ட வாய்ப்பு கேட்டு வந்தபோது, என்னய்யா இவரு கொரியன் மாதிரி இருக்காரேன்னு யோசிச்சிருக்கேன். ஆனால், இன்னிக்கு அவரு எவ்வளவோ பெரிய உயரத்திலே இருக்கார். இந்த படத்தில் இதுக்கு முன்னாடி பார்த்த அர்ஜுனை பார்க்க முடியாது. ஒரு வித்தியாசமான ஆளை பார்க்கலாம். நானா படேகர் கூட, எப்படி அர்ஜுனை இந்த கேரக்டருக்கு கரெக்டா தேர்ந்தெடுத்தீங்கன்னு கேட்டார்” என்ற பாரதிராஜா சொன்ன இன்னொரு விஷயம்தான் சர்ச்சையை கிளப்ப நினைக்கிறவர்களுக்கு பெரும் தீனி.
“சிவாஜி, கமல் நடிப்பை கவனித்து பார்த்தால், அது நடிப்புங்கறது தெரிஞ்சுடும். ஆனால், அர்ஜுன் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத மாதிரி நடிச்சிருக்கார்” என்றார். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ கமல்?
-ஆர்.எஸ். |