‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா

கடந்த மார்ச் 1 முதல் தயாரிப்பாளர் சங்கம் சினிமாவின் நலனுக்காக புதிய படங்களை வெளியிடாமல், ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எதுவும் செய்யாமல் ஸ்ட்ரைக் செய்து போராடி வருகிறது.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஜி.முத்தையா ‘தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை மற்றும் அவசியமானவை’ என தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 “தற்போது தமிழ்த் திரையுலகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளதை நாம் அனைவருமே அறிவோம். முழுமுதல் காரணம், பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற வாய்ப்பே இல்லா பரிதாபகரமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்புத் தொழில் இயந்திரத்தில் சிக்கிய கரும்பாய்த் தவிப்பதற்கு முக்கியக் காரணங்கள்:

  1. சிறிய முதலீட்டுப் படங்களுக்கு மினிமம் கேரண்டிஉத்தரவாதம் இல்லை.
  2. சிறு படங்களை வாங்க எவரும் முன்வருவதில்லை. தயாரிப்பாளரே விநியோகஸ்தராகவும் செயல்பட வேண்டிய கட்டாயம்.
  3. தயாரிப்பின் மூன்று நிலை மற்றும் வணிகம் என அனைத்து நிலையிலும் ஜி.எஸ்.டி. வரி மற்றும் தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி.
  4. திரையரங்கிற்கும் வாடகைப் பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்.
  5. கூடுதலாக, க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ. கட்டணம் கட்டியாக வேண்டும்.
  6. இவ்வளவுக்கும் தயாராக இருந்தாலும், சிறு படங்களுக்குத் தியேட்டர் தரமறுக்கும் அவலம்.
  7. தியேட்டர் தந்தாலும் சஸ்டெயினிங் டைம் எனப்படும் வெற்றிக்கு உகந்த நேரம் வழங்காமல், ஒரே நாளில் ஒரே காட்சியில் கூட்டம் இல்லை எனக்கூறி திரைப்படத்தை நிறுத்திவிடுவது.
  8. இவ்வளவு துன்பத்தையும் மீறி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு உண்மை கணக்கு காட்டாமல், திருட்டுக் கணக்கு காட்டும் திரையரங்கங்கள்.
  9. இது அனைத்திலும் கொடிய திருட்டு விசிடி சவால்.

இத்தனை ஆபத்துகளையும் தாண்டி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை, உண்மையில் மாபெரும் தியாகிகள் என்றே சொல்லலாம். இதில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் திருட்டு டிக்கெட் இல்லாத ஆன்லைன் டிக்கெட்டிங்கை வலியுறுத்துகிறது. அதை இந்த நொடிவரை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். க்யூப் கட்டணத்தையும் குறைக்க மறுக்கிறார்கள்.

அதனால்தான் ஸ்டிரைக் தொடர்கிறது. இந்த ஸ்டிரைக், காலத்தின் கட்டாயம். இல்லையேல் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் மட்டும்தான் படம் எடுக்க முடியும். சிறு தயாரிப்பாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போய்விடும்.

எனவே, தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்துப் போராடும் கோரிக்கைகள் நியாயமானவை மற்றும் அவசியமானவை. தமிழ் சினிமா தயாரிப்பு துறையைக் காப்பாற்ற, தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்குத் துணைநின்று நமது சங்கமும் நாமும் இந்தமுறை வென்றுகாட்ட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author

%d bloggers like this: