அமைச்சர் நம்பிக்கை விஷால் நன்றி

கடந்த ஒரு மாத காலமாக சினிமாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கம் மும்முரமாக இருக்கிறது. ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திருந்தாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி தொழிலாளர் அமைப்பு என சினிமா அமைப்புகள் ஒன்று சேர்ந்து வரும் புதன் அல்லது வியாழன் கிழமை பேரணி ஒன்று நடத்தி அதன் மூலம் முதல்வரை சந்தித்து தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரிக்கை வைக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார். ஆனால் தற்போது பேரணி நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “தயாரிப்பாளர்களின் பிரச்சினை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிரந்தரத் தீர்வு காணப்படும். தேவைப்பட்டால் திரைத்துறைக்குத் தனி வாரியம் அமைக்கப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

You might also like More from author

%d bloggers like this: