‘சவரக்கத்தி’ – விமர்சனம்

இயக்குனர் ராம் கதையின் நாயகனாகவும் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்து வெளிவந்துள்ள படமே ‘சவரக்கத்தி’. இப்படத்தில் கதையின் நாயகியாக பூர்ணா நடித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார் மிஷ்கின். இயக்கியிருப்பவர் மிஷ்கினின் தம்பியும், உதவியாளருமான ஆதித்யா.

சவரத் தொழிலாளியான ராமிற்கு காது கேளாத வாயாடி மனைவி பூர்ணா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒருநாள் தனது மச்சான் திருமணத்திற்கு செல்லும் ராம் பரோலில் வெளிவந்து, மாலை 5 மணிக்கு மீண்டும் ஜெயிலுக்குப் போகப் போகும் மிகப் பெரும் தாதாவான மிஷ்கினுடன் உரசல் ஏற்படுத்த, கடுப்பான மிஷ்கின் ராமை கொன்றேத் தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விரட்டுகிறார். ராம் மிஷ்கினிடமிருந்துத் தப்பித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

இதுவரைக்கும் இயக்குனர் மிஷ்கின் படங்களும் சரி இயக்குனர் ராமின் படங்களும் சரி எவ்வளவு சீரியசாக இருக்கும் என்று நமக்குத் தெரியும். இந்த நிலையில் இருவரும் ஒரே படத்தில் சேர்ந்துள்ளார்கள் என்றால் அது எப்படி இருக்கும் என்று நாம் நினைத்தால் அதற்கு மாறாக படம் முழுக்க நகைச்சுவைத் தெறிக்க விடும் படத்தைத் தந்துள்ளார்கள்.

மிஷ்கினின் கதையும், திரைக்கதையும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் ஆங்காங்கே நம்மை நெகிழ வைக்கும் உணர்வுப் பூர்வமான மிஷ்கின் டச் சீன்களும் உள்ளன.

சவரத் தொழிலாளியாக நிஜமாகவே தரையில் ரோட்டில் உருண்டுப் புரண்டு கடுமையான சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். மனைவியிடம் அருவருப்பான பழமொழிகள் கலந்த திட்டு வாங்கும்போதும் சரி, சலூனில் உலக நியாயங்கள் பேசும்போதும், மிஷ்கினிடம் மாட்டிக் கொண்டு ஓடும்போதும் நடிகர் ராம் அசத்தல்.

உருண்டு திரண்ட உடலும் கண்களும் கொண்ட தாதா மிஷ்கின் செம சர்ப்ரைஸ். முதல் சீன மட்டும் பில்டப்பாகக் காட்டிவிட்டு அவர் அதன் பிறகு செல்லும் இடங்களிலெல்லாம் பல்பு வாங்குவது மிஷ்கினுக்கே உரிய பகடி.

ராம், மிஷ்கினை விட அதிகம் ஸ்கோர் செய்வது பூர்ணாதான். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும், வாயாடி மனைவியாகவும் வாழ்ந்துள்ளார். இத்தனை நாள் இப்படி ஒரு நடிகையை மிஸ் பண்ணியது தமிழ் சிநிமாவிற்குத்தான் நஷ்டம் என்று சொன்னால் மிகையாகாது.

கார்த்திக்கின் ஒளிப்பதிவும், அரோல் கொரொலியின் இசையும் வழக்கமான மிஷ்கின் படங்களுக்கான உழைப்புடன் நகைச்சுவை துரத்தலுக்குப் பயன்பட்டிருக்கின்றன.

கதையை கேட்டால் சீரியசாக இருப்பதுபோலத் தோன்றினாலும் படம் முழுக்க இழையோடும் நகைச்சுவைக்கு ஆதித்யாவின் இயக்கம்தான் முக்கிய காரணம். அதுவே படத்தின் ஆகப் பெரும் பலம். வழக்கமாக மிஷ்கினின் படங்களில் நாம் என்ன குறைகளாக சொல்வோமோ அதனையெல்லாம் கவனமாகத் தவிர்த்திருப்பதே அவரின் நல்ல இயக்கத்திற்கு சான்று.

மொத்தத்தில்

‘சவரக்கத்தி’ – கழுத்தில் கத்தி வைத்தாலும் சிரிப்பதை நிறுத்தவே முடியாது.  

You might also like More from author

%d bloggers like this: