‘மன்னர் வகையறா’ – விமர்சனம்

‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ என வெற்றிப் படங்களின் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, வம்சி, மீரா கிருஷ்ணன், நீலிமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை விமலே சொந்தமாகத் தயாரித்துள்ளார்.

ஊரில் மதிப்புமிக்கத் தலைவரான பிரபுவிற்கு விமல், கார்த்திக் குமார் இருவரும் மகன்கள். அதேபோல் ஜெயப்பிரகாஷ் குடும்பத்திற்கும், அவரது மச்சான் குடும்பத்திற்கும் உள்ள நீண்ட பகையைத் தீர்க்க கயல் ஆனந்தியின் தங்கையும், ஜெயப்பிரகாஷின் மூத்த மகளுமான சாந்தினியை மச்சானின் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். ஆனால் சாந்தினியும், விமலின் அண்ணனுமான கார்த்திக் குமாரும் காதலிப்பதால் கல்யாண வீட்டில் சாந்தினியை தூக்கி வந்து கார்த்திக் குமாருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார் விமல்.

இதனால் அவமானப்படும் ஜெயப்பிரகாஷின் மகன் வம்சி அதே மாப்பிள்ளைக்கு கயல் ஆனந்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கயல் ஆனந்தியும், விமலும் ஏற்கனவே காதலர்கள். இந்நிலையில் விமல் என்ன முடிவெடுக்கிறார், கயல் ஆனந்தியை கை பிடித்தாரா இல்லையா என்பதே கதை.

விமலுக்கு என்றே செய்த கதை என தாராளமாக சொல்லலாம். இதனால் விமலும் புகுந்து விளையாடியுள்ளார். அதுவும் முதல் முறையாக வலுவான ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். ஹீரோ விமலுக்கும் தயாரிப்பாளர் விமலுக்கும் நிறைவான படமாகத் தந்துள்ளார் பூபதி பாண்டியன்.

விமலுக்குப் பிறகு படத்தைத் தூக்கி நிறுத்துவது கயல் ஆனந்திதான். இதுவரை சோகமான ஆனந்தி இதில் ஜாலி கேலி கிண்டல் நக்கல் என இறங்கி அடித்து நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறார். அதேபோல் லைட்டாக வெயிட் போட்டு நம்மை பெருமூச்சு விட வைக்கிறார்.

ரோபோ சங்கர் முதல் பாதியில் நெளிய வைப்பவர் இரண்டாம் பாதியில் தியேட்டரையே சிரிக்க வைத்துக் கதற வைக்கிறார். சிங்கம் புலியும் இரண்டாம் பாதியில் சிரிக்க வைக்கிறார்.

பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி, நீலிமா என அனைவருமே திரைக்கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.

குறிப்பாக வில்லனாக வருபவர் செம மிரட்டல் நடிப்பு.

இயக்குனர் பூபதி பாண்டியன் தன் பாணியிலிருந்து விலகி விமல் பாணியில் ஒரு குடும்பக் காமெடிப் படத்தைத் தந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இருவரின் ஒளிப்பதிவு நேர்த்தி. ஜேக்ஸ் பிஜோயின் இசை ஜாலி மேளா.

மொத்தத்தில்

‘மன்னர் வகையறா’ – குடும்பக் கொண்டாட்டத்திற்கான காமெடித் திருவிழா

You might also like More from author

%d bloggers like this: