‘நிமிர்’ – விமர்சனம்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நிமிர்’. மலையாளத்தில் திலீப் போத்தன் இயக்கி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்த படமான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நேஷனல் ஸ்டுடியோ வைத்து ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளை போட்டோ எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவருடைய காதலி பார்வதி நாயர். ஒருநாள் யாரென்றே அறிமுகம் இல்லாத சமுத்திரகனியால் ஊரார் முன்னிலையில் செமத்தியாக அடிவாங்குகிறார். பெரும் அவமானப்படும் உதயநிதி சமுத்திரகனியை திருப்பி அடிக்கும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுக்கிறார். அவர் காதலி பார்வதி மேனன் வேறொருவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இந்நிலையில் நமிதா ப்ரொமோத்திற்கும் உதயநிதிக்கும் காதல் மலர, பிறகுதான் தெரிகிறது அவரின் அண்ணன்தான் சமுத்திர கனி என்று. இப்போது உதயநிதி சமுத்திர கனியை திருப்பி அடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

நேஷனல் செல்வமாக உதயநிதி ஸ்டாலின் மடித்து விட்ட சட்டை, வெள்ளை வேஷ்டி என தென்காசி இளைஞராகவே மாறியுள்ளார். சமுத்திரகனியிடம் அடிவாங்கி விட்டு இயலாமையிலும், அவமானத்திலும் தடுமாறும் ஒரு காட்சியே போதும் தான் ஒரு நல்ல நடிகர்தான் என்பதை நிரூபித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ‘மனிதன்’ படத்திற்குப் பிறகு உதயநிதி பெருமைப்படும் ஒரு படைப்புதான் நிமிர்.

சமுத்திரகனி வீரமும், வீரியமுமாக வலம் வந்தாலும் நமக்குத் தெரிந்த முகம் என்பதால் அவர்மேல் உதயநிதிக்கு ஏற்பட்ட கோபம் நமக்கு வராமல் இருப்பது பெரிய மைனஸ்.

நமிதா ப்ரோமொத், பார்வதி நாயரும் கதைக்குத் தேவையான கச்சித கலைமான்கள்.

இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள்தாஸ் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர். இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு இரண்டு பேருக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வேலை இல்லை படத்தில்.

ரீமேக் படத்தில் செய்யும் வழக்கமான தவறையே செய்துள்ளார் அனுபவ இயக்குனர் பிரியதர்ஷன். எல்லாருமே தெரிந்த முகம் என்பதால் கேரக்டருக்கு ஏற்படுகின்ற இன்ப துன்பங்களில் இயல்பாக நம்மால் ஓட்ட முடியவில்லை.

அதேபோல் மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை நம்மை பொறுமையின் உச்சிக்கேக் கொண்டு செல்கிறது.

படத்தின் பலம் குற்றால அழகைக் கேமராவில் குவித்த ஏகாம்பரத்தின் அற்புதமான ஒளிப்பதிவுதான்.

தர்புகா சிவா, அஜநீஷ் லோகேஷ் இசை மெல்லிய நீரோடை.

மொத்தத்தில்

‘நிமிர்’ – உதயநிதி ஸ்டாலினை நிமிர வைக்கும் படம்.

You might also like More from author

%d bloggers like this: