‘சக்க போடு போடு ராஜா’ – விமர்சனம்

காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் ஹீரோவாக வெற்றி பெற்றேத் தீர்வேன் என்ற முனைப்புடன் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ வரிசையில் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாயிருக்கிறார் சிம்பு.

கதை

ஷாஜகான்’ விஜய் போல காதலர்களை சேர்த்து வைப்பதையே வேலையாகக் கொண்டிருக்கும் சந்தானத்தைக் கொலைவெறியோடு தேடிக் கொண்டிருக்கிறார் தாதா சம்பத். சந்தானமோ பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான் சம்பத்தின் தங்கை வைபவி சாண்டில்யாவைப் பார்த்தவுடன் காதல் வருகிறது. தன் தங்கை காதல் விவகாரத்தைத் தெரிந்து கொள்ளும் சம்பத், அவரை வேறாருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். தான் காதலித்த வைபவி சாண்டில்யாவை கரம் பிடிக்க சந்தானம் எப்படியெல்லாம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார் என்பதே மீதிக்கதை.

இந்தக் கதையை படிக்கும்போதே பல பழைய காதல் படங்கள் நினைவுக்கு வரலாம். அதுவும் தனுஷ் நடித்த ‘உத்தம புத்திரன்’ படம் நிச்சயமாக வரும். காரணம் அதன் ஒரிஜினல் படமான ‘ரெடி’ படத்தைத் தான் ரீமேக்கியுள்ளார்கள் என்றே சொல்லலாம். ஆனாலும் கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சேதுராமன்.

படத்தில் நிறைய காமெடியன்கள் இருந்தாலும் காமெடி மட்டும் இல்லை என்பது பெரும் பலவீனம். அதே சமயத்தில் இரண்டாம் பாதியில் ஓரளவு காமெடி களை கட்டுகிறது என்பதும் உண்மை. தன்னை ஒரு முழுமையான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள சந்தானம் நடனம், சண்டை என ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது அவரி ஹீரோவாக ஏற்றுக் கொள்ள. அவர் தொடர்ந்து இதுபோன்ற காதல் காமெடிக் கதைகளை விட்டு கொஞ்சம் சீரியஸ் கதையில் நடித்தால் அவரின் ஹீரோ ஆசை வெற்றி பெற வாய்ப்புண்டு.

அறிமுக நாயகி வைபவி சாண்டில்யா கவர்ச்சியால் நம்மை கிறங்கடிக்கிறார். ஆனால் நடிப்பதற்கு மட்டும் பெரிதாக வாய்ப்பில்லை.

விவேக், மயில்சாமியின் காமெடி படத்தை ஓரளவுக் காப்பாற்றியிருக்கிறது.

விடிவி கணேஷும், ரோபோ சங்கரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சம்பத் வழக்கமான தாதா அண்ணன்.

அறிமுகமாயிருக்கும் சிம்புவின் இசையில் இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும் ரகம். பின்னணி இசை ரொம்பவே சுமார்.

அபிநந்தனின் ஒளிப்பதிவு பளிச். ஆண்டனியின் எடிட்டிங் முதல் பாதியை இன்னும் சுருக்கியிருக்கலாம்.

மொத்தத்தில்

‘சக்க போடு போடு ராஜா’ – சக்க போடு போடவில்லை.

You might also like More from author

%d bloggers like this: