‘வேலைக்காரன்’ – விமர்சனம்

தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் சோஷியல் த்ரில்லரை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாஸில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சார்லி, ரோகினி, விஜய் வசந்த், தம்பி ராமையா, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், ஒய்.ஜி.மகேந்திரன், சரத் லோகிதாஸ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளிவந்திருக்கும் படமே ‘வேலைக்காரன்’.

கதை

கொலைகார குப்பத்தில் தாதா பிரகாஷ்ராஜ் குப்பத்து இளைஞர்களை கூலிப்படைகளாக செயல்பட வைத்து அவர்கள் வாழ்வையே நாசமாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குமுறும் அதே குப்பத்தில் வாழும் சிவகார்த்திகேயன் ஒரு ஃஎப்எம் சேனலை தொடங்குகிறார். அதன்மூலம் பிரகாஷ்ராஜின் சுயரூபத்தைக் கிழிக்க முயல, அதே நேரத்தில் தனது வீட்டிலேயே வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளதால் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கே ஏற்கனவே சீனியர் போஸ்டில் இருக்கும் ஃபகத் ஃபாஸில் அட்வைஸின்படி மக்களிடம் கார்ப்பரேட் பாக்கெட் உணவுப் பொருள்களை வியாபாரம் செய்கிறார். ஒரு கட்டத்தில்தான் தெரிகிறது பிரகாஷ்ராஜின் கூலிப்படைக்கும், கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று. இதனால் பொங்கி எழும் சிவகார்த்திகேயன் அந்த கார்ப்பரேட் கம்பெனியின் முகத்திரையை அதே கம்பெனியின் வேலைக்காரர்களின் துணை கொண்டு கிழித்து மக்களிடம் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்பதே கதை.

படத்தின் உண்மையான முதல் ஹீரோ சந்தேகமே இல்லாமல் மோகன் ராஜாதான். ஒரு
கூலிப்படையின் பின்னால் இருக்கும் அப்பாவி சேரி இளைஞர்கள், ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டாரின் வடிவமைப்பிலேயே ஒளிந்திருக்கும் கார்ப்பரேட்டின் வியாபாரத் தந்திரம், வியாபாரத்திற்காக நடக்கும் கார்ப்பரேட்டின் லாபவெறி வேட்டை, ஒரு மிடில் கிளாஸ் வீட்டில் எப்படியெல்லாம் கார்ப்பரேட் பொருட்கள் தந்திரமாக உட்புகின்றன என்பது முதல் பல விவரங்கள், விவரணைகள் என அத்தனையையும் திரையில் கொண்டு வந்திருக்கும் மோகன் ராஜாவின் அபிரிமிதமான  உழைப்பு அபாரம். தனது முந்தையப் படத்தைவிட பல மடங்கு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கும் அவரின் நல்லெண்ணத்திற்கு சல்யூட்.

சிவகார்த்திகேயன். இதுவரை பெண்களை கலாய்த்தும், காதலித்தும் சுற்றிக் கொண்திருந்தவருக்கு நிஜமாகவே லைஃப் டைம் படம் என்று சொன்னால் மிகையாகாது. சிவாவும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அடக்கமாக, வெட்டி ஆரவாரம் எதுவும் இல்லாமல் அருமையாகவே நடித்துள்ளார். உணர்வுப் பூர்வமான பல காட்சிகளில் நனறாகவே ஸ்கோர் செய்கிறார்.

ஃபகத் ஃபாசில். மலையாள சினிமாவின் விஜய் சேதுபதியின் தமிழ் அறிமுகப் படம். தனக்குக் கொடுக்கப்பட்ட களத்தில் மிக அருமையாக அனாயசமாக நடித்து சுண்டி இழுக்கிறார். குதர்க்கமான குள்ளநரி கதாபாத்திரத்தை நம் கண்முன் நிறுத்துகிறார்.

நயன்தாராவிற்கு வேலைக்காரனில் வேலையே இல்லை என்பதே உண்மை. சில காட்சிகளில் மேக்கப் செம உறுத்தல்.

பிரகாஷ் ராஜ், விஜய் வசந்த், சார்லி, ரோகினி, சரத் லோகிதாஸ் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள்.

சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் ஆகியோர் இருந்தும் படம் முழுக்க சீரியஸ் மோடில் போவதால் இவர்களுக்கும் அவ்வளவாக வேலை இல்லை.

சினேகா சர்ப்ரைஸ் ஷாக்கிங் ரீ என்ட்ரி. கஸ்தூரியாகக் கச்சிதமாக மனதில் இடம் பிடிக்கிறார்.

படத்தின் பலவீனங்கள் என்றால் நிறைய காட்சிகளில் வெறும் விழிப்புணர்வுக் கருத்துக்கள் வாய்வழியாகவே சொல்லப்படுவதால் அவற்றின் தாக்கம் குறைவாக உள்ளன.

அனிருத்தின் இசையில் பாடல்கள் சுகம். ஆனால் பின்னணி இசை நம்மைத் தூங்க வைத்துவிடுகிறது. அந்தளவுக்கு குறைவான மெனக்கெடலோ என்று தோன்றுகிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு கொலைகார குப்பம், கார்ப்பரேட் கம்பெனி என இரு வேறு தளங்களிலும் நம்மை பயணிக்க வைத்துள்ளது.

முத்துராஜின் குப்பம் செட்டின் உழைப்பு அபாரம்.

மொத்தத்தில்

‘வேலைக்காரன்’ – வெற்றியாளன்.

You might also like More from author

%d bloggers like this: