‘மாயவன்’ – விமர்சனம்

‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ என தரமான லோ பட்ஜெட் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்குப் புத்துயிர் ஊட்டிய தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல் முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படமே ‘மாயவன்’. இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை நலன் குமாரசாமி எழுதியுள்ளார்.

கதை

இளம் போலீஸ் ஆபிசர் சந்தீப் கிஷன் ஹவுசிங் போர்டு காலனியில் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும்போது, ஒரு வீட்டினுள் தீனா தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடையும் சந்தீப், உயிர் தப்பிப்பதற்காக போராடுகையில் தீனா கொல்லப்படுகிறார். சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறி மீண்டும் பணியில் சேர சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் லாவண்யா திரிபாதியிடம் சான்றிதழ் வாங்கி வரும்படி உயரதிகாரிசொல்ல, ஆனால் லாவண்யா, அவரது மனநிலை பணியில் சேரும் அளவுக்கு இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பாகும் சந்தீப் கிஷன் மற்றொரு  டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி பணியில் சேருகிறார் சந்தீப்

இந்த நிலையில்தான் தீனா கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை, விஞ்ஞானி, உளவியல் துறை நிபுணர் என ஒவ்வொருவராக அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கை கையில் எடுத்து லாவண்யா திரிபாதி மற்றும் பகவதி பெருமாள் உதவியுடன் துப்பு துலங்கும் சந்தீப்புக்கு பல விசித்திரமான தகவல்கள் கிடைக்கின்றது. சாகாவரம், கூடுவிட்டு கூடு பாயும் முறையை டெக்னாலஜி பயன்படுத்தும் முறை, அதனால் ஏற்படும் விளைவுகள் என கஷ்டப்பட்டு பல தகவல்களை கண்டுபிடிக்கும் சந்தீப் கிஷன் சீரியல் கொலைகாரனை கண்டுபிடித்தாரா, அவனை மேற்கொண்டு என்ன செய்தார்…? என்பதே மீதிக்கதை.

மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால் என தமிழில் நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடும் சந்தீப் கிஷனுக்கு இதில் போலீஸ் வேடம். கனகச்சிதமாகப் பொருந்திப் போகிறார். லாவண்யா திரிபாதி, பகவதி பெருமாளுடன் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கக் காட்டும் முனைப்பும், இறுதியில் ஜாக்கி ஷெராப்புடன் போடும் சண்டையில் காட்டும் ஆவேசமும் ஆசம்.

மனோதத்துவ டாக்டராக லாவண்யா திரிபாதி. அள்ளிக் கொள்ளும் அழகால் நம்மை கொள்ளை கொள்கிறார்.

பகவதி பெருமாள், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் என அனைவரின் நடிப்பும் கச்சிதம்.

அவ்வப்போது வரும் கே.எஸ்.ரவிகுமார் பேசும் ஒவ்வொரு வசனமும் நச்.

நலன்குமாரசாமியின் திரைக்கதை, வசனம் அச்சு அசல் க்ரைம் த்ரில்லருக்கான ட்ரீட்மென்ட். ஆனாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

ஜிப்ரானின் மிரட்டல் இசை மாயவனின் பலம்.

கேமராமேன் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு ஜிலீர்.

இயக்கிய முதல் படத்திலேயே வித்தியாசமான த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கிய சி.வி.குமார் ஜெயித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில்

‘மாயவன்’ – மாயஜாலக்காரன்.

You might also like More from author

%d bloggers like this: