‘கொடி வீரன்’ – விமர்சனம்

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ என சாதியப் படங்களை தொடர்ந்து எடுக்கும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார், விதார்த், பசுபதி, மகிமா நம்பியார், சனுஜா, பூர்ணா என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘கொடி வீரன்’.

கதை

ஊரே வணங்கும் சசிகுமார் தங்கை சனுஷாமீது பெரும் பாசம் கொண்டவர். அதே ஊரைச் சேர்ந்த பசுபதி அவருடைய தங்கை பூர்ணா கணவர் அதிகாரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார் உள்ளூர் வட்டாட்சியர் விதார்த். இதனால், வட்டாட்சியரையும் அவருக்கு உதவும் அரசு வழக்கறிஞரையும் கொலைசெய்வதென முடிவெடுக்கிறார் பசுபதி. இதற்கிடையில் அந்த வட்டாட்சியருக்கு தன் தங்கையை மணம் முடித்துக்கொடுக்கும் சசிகுமார், வட்டாட்சியரை விட்டுவிடும்படி பசுபதியிடம் கேட்க. ஆனால் பசுபதி தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபட, ஒரு சண்டையில் பசுபதியின் மச்சான்  கொல்லப்பட, தங்கையின் சபதத்திற்காக சசிகுமாரையும் வட்டாட்சியரையும் கொல்ல முயற்சிக்கிறார் பசுபதி. ஆனால், தன் அண்ணன் எப்படியும் தன் கணவரைக் காப்பாற்றுவார் என உறுதியாக இருக்கிறார் சனுஜா. சனுஜாவின் நம்பிக்கையை காப்பாற்றினாரா சசிகுமார் என்பதேதான் மீதிக்கதை.

முதல் பாதியில் மெதுவாக ஆரம்பிக்கும் கதை பசுபதியின் என்ட்ரிக்குப் பிறகு சூடு பிடிக்கிறது. இதற்குப் பிறகு படம் முழுக்க, வெட்டு, குத்து, மொட்டையடித்தல், கொலை, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களுக்கு சடங்கு, தாலி அறுப்பது, பழிவாங்குவதற்கான சபதங்கள் என நகர்கிறது படம்.

இயக்குனர் முத்தையா வழக்கம்போல தன் சாதியப் பெருமைகளை தூக்கிப் பிடிக்கும் படமாகத்தான் கொடி வீரனை இயக்கியுள்ளார்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகளைவிட சசிகுமாருக்கான பஞ்ச் வசனங்கள் அதிகம். “அவன் கொடி வீரன் இல்ல, குலத்துக்கே வீரன்”, “இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே”, “தப்புப் பண்ணினா கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்”, “எங்க அண்ணன் எவன் எதுக்கயும் வர்றவன் இல்ல, எவனையும் எதிர்க்க வர்றவன்” என்று சசிகுமாரின் தங்கையும் ஊர்க்காரர்களும் பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார்கள். இது பரவாயில்லை என்று பார்த்தால், அஜீத் படங்களைப் போல வில்லனாக வருபவரும் “நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்” என்று ஹீரோவின் புகழ் பாடுகிறார்.

சசிகுமார். நடிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் கொடி வீரனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.

சசிகுமாரின் தங்கையாக சனுஷா மப்பும் மந்தாரையுமாக இருக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். ஹீரோயினாக மஹிமா நம்பியார் கச்சிதம்.  

எல்லாரையும் விட நடிப்பில் அசாலட்டாக மிரட்டியிருக்கிறார் பூர்ணா. படத்தின் மையநாதமே இவர்தான்.

பசுபதி வழக்கம்போல உறுமல் வில்லன்.

படத்தின் ஒளிப்பதிவு எஸ்.ஆர். கதிர். இசை ரகுநந்தன். இருவருமே படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்துள்ளனர்.

மொத்தத்தில்

‘கொடி வீரன்’ – வெற்றி வீரன்

You might also like More from author

%d bloggers like this: