‘திருட்டுப் பயலே 2’ – விமர்சனம்

‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’ என்று தரமான படங்களை தந்த இயக்குனர் சுசி கணேசனுக்கு கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம்தான் ‘திருட்டுப் பயலே’. ‘கந்தசாமி’ தோல்வியால் நீண்ட வருடங்கள் படங்கள் இயக்காமல் இருந்த சுசி கணேசன் ‘திருட்டுப் பயலே 2’ மூலம் ரீ என்ட்ரி ஆயிருக்கிறார். அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று பார்ப்போம்.

கதை

போலீஸ் அதிகாரியான பாபி சிம்மாவும் அமலா பாலும் அன்பான தம்பதியர். நேர்மையான போலீசாக இருக்கும் பாபி சிம்மாவிற்கு பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலையை செய்யச் சொல்கின்றனர். ஒட்டு கேட்கும் போது அதில் பிரசன்னா பல திருமணம் ஆன பெண்களை மயக்கி பேசி வருவது தெரிகின்றது. ஒரு நாள் யதார்த்தமாக அந்த போன் காலில் அமலா பால் வாய்ஸ் கேட்க, அதை தொடர்ந்து அதிர்ச்சியடையும் பாபி சிம்மா பிரசன்னாவிற்கும், அமலா பாலிற்கும் உள்ள உறவு என்ன, ஒரு கணவனாக தன் போலீஸ் வேலையின் மூலம் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே மீதிக்கதை.

முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறார் சுசி கணேசன். தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் பணியின் சிக்கல்கள், அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்ற தகவல்கள், அதற்குப் பின்னான அரசியல் சதிகள். தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி பாபி சிம்மா பணம் சம்பாதிக்கும் காட்சிகள், வில்லனாக வரும் பிரசன்னாவின் அறிமுகம் என இடைவேளை வரை தனது தொடர் முத்திரைகளால் அசத்துகிறார் சுசி கணேசன். இரண்டாம் பாதியில் ஒருவிதமான சலிப்பு ஏற்படுவது போல பிரம்மை ஏற்பட்டாலும் ரொம்பவெல்லாம் சோதிக்காமல் ரசிக்கவே வைக்கிறார்.

பாபி சிம்மாவின் முந்தைய படங்களை பார்த்துவிட்டு அவர் மேல் உள்ள கடுப்பு இந்தப் படத்தின் மூலம் அபப்டியே கரைந்து போய் விடுகிறது. ஹானஸ்ட் கரெப்ட் போலீஸ், அன்பான கணவன் என இரண்டு விதமாக நடிப்பில் மிளிர்கிறார்.

அமலா பால். சந்தோஷம், உற்சாகம், காதல், கவர்ச்சி, பயம் என பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடங்களில் பின்னியெடுக்கிறார். பிரசன்னா ஏற்கனவே இதுபோன்ற அழுத்தமான வில்லன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்திலும் அவர்மேல் கோபம் ஏற்படுமளவுக்கு வில்லனாக அசத்தியிருக்கிறார்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை விறுவிறுப்பு.

மொத்தத்தில்

‘திருட்டுப் பயலே 2’ – ஜெயித்து விட்டான்.

You might also like More from author

%d bloggers like this: