சிங்கம் -3 பட்டையை கிளப்பும்-ஒரு பார்வை..!

சூர்யா-இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்துள்ள சிங்கம்-3 திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுமா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்..!

2009-ஆம் ஆண்டு அயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சூர்யாவின் ஆதவன் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.அயன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த சூர்யா,ஆறு,வேல் படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹரியுடன் 2010-ஆம் ஆண்டு மற்றொரு ஆக்‌ஷன் படமான சிங்கம் படத்தில் இணைந்தார்.

 தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த ஹரிக்கு,சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக எடுக்கப்பட்ட ‘சேவல்’ தோல்வியை அளித்தது.எனவே கண்டிப்பாக வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் ஹரியும் இருந்தார்.அதற்கேற்ப விறுவிறுப்பான ஒரு கதையையும் அவர் உருவாக்கியிருந்தார்.காக்க காக்க படத்தில் ஒரு பக்கா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த சூர்யாவுக்கு,ஹரி உருவாக்கியிருந்த தூத்துக்குடி காவல்துறை அதிகாரி வேடம் ஒத்து வருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

ஆனால் சிங்கம் படம் வெளிவந்து அனைவரின் சந்தேகத்தையும் புரட்டிப் போட்டது.விறுவிறுப்பான காட்சிகள்,அதிரடி திருப்பங்கள்,அக்மார்க் ஹரியின் வேகமான வசனங்கள்,அதை சூர்யா பேசியிருந்த விதம் என படத்திற்கு ஏகப்பட்ட பிளஸ் பாயிண்ட் அமைந்ததால் சிங்கம் சூப்பர் ஹிட்டானது.குறிப்பாக அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்ததும்,பிரகாஷ்ராஜுக்கும்,சூர்யாவுக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது.

சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் அடுத்த பாகம் எடுக்கப்படும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட எந்த தமிழ் படமும் பெரிய வெற்றியை அடையவில்லை எனவே பலரும் தெரிவித்தனர்.ஆனால் அதையும் இவர்கள் கூட்டணி மீண்டும் பொய்யாக்கியது.ஆக்‌ஷன்,வசனம் ஆகியவற்றோடு சந்தானத்தின் காமெடியும் படத்திற்கு வலு சேர்த்தது.படம் வெற்றிதான் என்றாலும் சிங்கம் முதல் பாகத்தை விட,விறுவிறுப்பான காட்சிகள் சற்று குறைவுதான் என பலரும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரண்டு பாகங்கள் வெற்றியடைந்ததால்,சிங்கம் திரைப்படம் சாண்டல்வுட்டிலும்,பாலிவுட்டிலும்,பெங்காலியிலும் ரீமேக் செய்யப்பட்டு முத்திரை பதித்தது.இந்த தொடர் வெற்றிகள் கொடுத்த நம்பிக்கையால்,சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமும் தற்போது எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்களை பொருத்தவரை சூர்யா-ஹரி கூட்டணிக்கே உரிய விறுவிறுப்பான காட்சி நகர்வுகள்,அக்மார்க் அதிரடி வசனங்கள் ஆகியவற்றையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்.மேலும் இந்த படத்தில் அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் என இரண்டு ஹீரோயின்கள் இருப்பதால் படத்தில் பல திருப்புமுனைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் பாகத்தில் வெளிநாட்டிற்கு சென்று துரை சிங்கம் வில்லன்களை வேட்டையாடுவார் என கூறப்பட்டுள்ளதால்,உள்ளூரில் நடக்கும் காட்சிகள் குறைவாகவே இருக்கும் எனலாம்.அதற்கேற்ப சண்டை காட்சிகளும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஹரி படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.அந்த காட்சிகள் மூன்றாம் பாகத்தில் குறையும் பட்சத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்றே கூறலாம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சிங்கம்-3 டீசர் மற்றும் சிங்கிள் டிராக் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.இதை வைத்தே சிங்கம் பீவர் இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு குறையவே இல்லை என்பது புரிகிறது.சூர்யா-ஹரி கூட்டணியில் வரும் படங்கள் எப்போதும் மினிமம் கேரண்டி என்பதால் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வரும் குடியரசு தினத்தன்று சிங்கம்-3 ரிலீஸாகிறது.எனவே அன்று வேறு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக வாய்ப்பில்லை என்பதால் சிங்கம்-3 கண்டிப்பாக ஹிட் படம்தான் என்பது உறுதியாக
தெரிகிறது.

You might also like More from author

%d bloggers like this: