‘தீரன் அதிகாரம் ஒன்று’ – விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

‘சதுரங்க வேட்டை’ படத்தில் பொதுமக்களிடம் பேராசை காட்டிப் பணத்தை ஏமாற்றும் கும்பலின் விதவிதமான திருட்டு முறைகளை அப்பட்டமாக நமக்குக் காட்டிய வினோத் தீரனில் 1995 முதல் 2௦௦5 வரை பத்து வருடங்களாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த பவேரியா கொள்ளைக் கும்பலின் குரூரக் கொலைகளையும், அந்தக் கொலைக் கூட்டத்தைக் கண்டுபிடித்த தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகளின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் மிக மிக நேர்த்தியோடு காட்டியிருக்கிறார்.

உண்மை சம்பவங்களை அதன் வீரியம் குறையாமலும் அதே சமயம் டாக்குமென்டரித்தனம் வந்து விடாமலும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து அற்புதமான திரைக்கதை அமைத்து இயக்கிய வினோத்தின் அர்ப்பணிப்பு அபாரம்.  நிஜமாகவே இயக்குனர் வினோத் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரம் என்று சொன்னால் துளிகூட மிகையல்ல.

இதுவரைக்கும் பால் பாக்கெட் திருடர்களாகவும் ஆட்டோவுக்குத் தீ வைத்துக் கலவரத்தை ஏற்படுத்தும் தீயவர்களாக இருக்கும் போலீஸையே பார்த்த நமக்கு உண்மையான போலீஸ் அதிகாரிகளின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் பதிவு செய்த வினோத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இப்படியொரு கதையின் மீது நம்பிக்கை வைத்து ஃபிரேமுக்கு ஃபிரேம் உழைப்பைக் கொட்டியுள்ளார் கார்த்தி. அப்பாவி மக்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் கொலைக்கூட்டத்தைப் பிடிக்கக் காட்டும் ஆவேசமும், தன்னுடைய கஷ்டங்களையும் அர்ப்பணிப்பையும் கேவலப்படுத்தும் மேல் அதிகாரியின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொண்டு தன் வேலையில் காட்டும் முனைப்பும் ஆசம். கார்த்தியின் திரை வாழ்வில் காலத்தால் மறக்க முடியாத பேர் சொல்லும் படம்தான் இது.

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வழக்கமான போலீஸ் படத்தில் அவரும் சாதாரண ஹீரோயின் கேரக்டர்தானே என்றாலும் அசத்தியுள்ளார். கார்த்தியின் மீதான காதலும் செல்ல சண்டையும் போடும்போதெல்லாம் தன் கேரக்டரை உணர்ந்து இயல்பாகவே கணவன் மனைவிக்குண்டான அன்னியோன்யத்தை அச்சுப் பிசகாமல் வெளிக்காட்டியுள்ளார். ரகுலுக்கு தமிழில் முதல் வெற்றிப் படம்தான் தீரன்.

போஸ் வெங்கட் கர்த்தியுடனான சக போலீஸ் அதிகாரியாக, தோழனாக மீண்டும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கவர்கிறார்.

வில்லனாக அபிமன்யு சிங். இவர் வருவதற்கு முன்னேயே நமக்கு இவர் மேல் ஏற்படும் பயம் இவர் முகத்தைப் பார்த்தபின் நமக்குக் காய்ச்சலே வந்து விடுகிறது. ஒரு நிஜக் கொலை, கொல்லைக்காரனாகவே மாறி, மிரட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை சரித்திர போலீஸ் படமாக சினிமாக் கல்வெட்டில் பொறித்திருக்கும் வினோத்தின் திரைக்கதை, இயக்கத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்கள் நான்கு பேர்.

படம் முழுக்க நிஜமாகவே கொலை நிகழ்வை தத்ரூபமாகக் கண்முன் கொண்டு வந்ததும், ரியலிஸ்டிகான சண்டைக் காட்சிகளையும் அமைத்த திலீப் சுப்ராயன், அதிர வைக்கும் பின்னணி இசையால் மிரட்டிய ஜிப்ரான், கண்முன்னேயே கொலைப் படலத்தைத் தத்ரூபமாகக் காட்டி, மிரட்சியை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், பத்து வருட கொள்ளைக் கும்பலின் பிடிபட்ட வரலாற்றை இரண்டரை மணி நேரம் தொகுத்து, ஒரு செகண்ட் கூட போரடிக்காமல் நம்மைப் பார்க்க வைத்த எடிட்டர் சிவனாண்டீஸ்வரர். இவர்கள்தான் அந்த நான்கு பேர்.

மொத்தத்தில்

தீரன் அதிகாரம் ஒன்று – காலத்தால் மறக்க முடியாத தமிழ் சினிமாவின் ‘சோலே’.

You might also like More from author

%d bloggers like this: