‘JESUS SAVES’ – ஹெச்.ராஜாவிற்கு சூடு வைத்த ‘ஜோசப்’ விஜய்

‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக வெளியில் இருக்கிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக ‘’நெட்டில்தான் ‘மெர்சல்’ பார்த்தேன்’’ என்று விஷாலிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஹெச்.ராஜா. ஆனாலும் அடங்காமல் தமிழ்நாட்டுக்கே 25 வருடங்களாக தெரிந்த விஷயத்தை, இன்றுதான் இவர் கண்டுபிடித்தது போல ‘’விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய்’’ என்று சொல்லி, அவரின் வாக்காளர் அட்டையும் வெளியிட்டார். விளைவு இன்னும் அதிகமாக நெட்டிசன்கள் இவரை அர்ச்சனை செய்தனர்.  

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அறிக்கை வெளியிட்டார் விஜய். ஜோசப் விஜய் என்ற பெயர் கொண்ட லெட்டர்பேடில் அந்த அறிக்கையை வெளியிட்டார். மேலும் அந்த லெட்டர்பெடில் JESUS SAVES என்றும் இருந்தது. விஜய்யின் இந்த செயல் ஹெச்.ராஜாவிற்கு வைத்த சூடு என்று சமூக வலைத்தளங்களில் விஜய்யை பாராட்டி வருகின்றனர்.

விஜய் வெளியிட்ட அறிக்கையில்

”மெர்சல்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றும் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றியடைந்துள்ள ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர்கள்(ரசிகர்கள், ரசிகைகள்), பொதுமக்கள் அனைவருக்கும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜய் அதில் கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: