‘’மதுபாட்டிலுக்கு ஒரு நியாயம், சினிமா டிக்கட்டிற்கு ஒரு நியாயமா…? – அரசு மீது கொந்தளிக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவை அழித்தேத் தீருவது என்ற முடிவில் இருக்கும்போல இந்த எடப்பாடி அரசு. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து கேளிக்கை வரியையும் சேர்த்து, தியேட்டர்களின் டிக்கட் கட்டண உயர்வுக்கும் அனுமதி அளித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அரசு.

இதனால் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பாரபட்சமே இல்லாமல் ஒட்டு மொத்தத் திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அரசின் இந்த கடுமையான நிலைப்பாட்டால் செம கடுப்பிலும், கோபத்திலும் உள்ளார்கள் திரையுலகினர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.பிரபு அரசின் மீது வருத்தத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

‘’தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகள் நகராட்சி, பேரூராட்சிகள் சார்ந்தவைதான். மதுபாட்டில் விற்கும்போது மாநகராட்சிக்கு ஒரு விலை, நகராட்சிக்கு ஒரு விலை என்று பட்டியல் இல்லை. ஆனால் சினிமா டிக்கெட் கட்டணத்தில் மட்டும் இப்படி பிரித்து விலைப்பட்டியலை அறிவித்திருக்கிறார்கள். மின் செலவு தொடங்கி திரையரங்க சவுண்ட் வரை எல்லா திரையரங்குகளுக்கும் ஒன்றுதான். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது தெரியவில்லை.

திரைப்பட அமைப்புகள் சார்பில் அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி இந்த புதிய கட்டண அறிவிப்பு இல்லை என்பது பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் சம்பள கட்டுப்பாடு தொடங்கி திரைப்பட அமைப்புகளின் பல செயல்பாடுகளை அரசின் புதிய கட்டண அடிப்படையை வைத்துதான் திட்டமிடவிருந்தோம். ஆனால், இந்த புதிய கட்டண விவரம் சரியாக இல்லை.

9 மற்றும் 10-ம் தேதிகளில் அனைத்து திரைப்பட அமைப்புகள் கூடி கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகுதான் எங்களின் நிலைப்பாட்டை கூற முடியும்’’ என்று வெளிப்படையாகவே தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

You might also like More from author

%d bloggers like this: