‘வல்ல தேசம்’ – விமர்சனம்

தமிழில் நாம் நிறைய தீவிரவாதம் பற்றிய படங்களை பார்த்திருந்தாலும் வித்தியாசமான, விறுவிறுப்பான படம்தான் ‘வல்ல தேசம்’. இந்தப் படத்தில் அனுஹாசன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கதை

லண்டனில் தன் அன்பான கனவர், அழகான குழந்தை என நிம்மதியாக வாழ்ந்து வரும் அனுஹாசனை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்கிறார்கள். விளைவு அவரது கணவனை அவர் கண்முன்னாலேயே கொன்றுவிட்டு, அவர் குழந்தையையும் கடத்திச் சென்று விடுகின்றனர். குற்றுயிரும் குலையுருமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படும் அனுஹாசன் முழுமையாகக் குணமறிந்து தனது குழந்தையை தேட ஆரம்பிக்கின்றனர். அதே சமயம் உண்மையில் அனுஹாசன் யார் என்று ஃபிளாஷ்பேக் விரிய, அவர் ஒரு இந்திய ராணுவ அதிகாரி என்று தெரிய வருகிறது. அவரின் சீனியர் ஆபிசர் நாசரின் ரகசிய அனுமதிப் பெற்று இந்தியாவை அழிக்கத் திட்டமிட்டிருக்கும் தீவிரவாதக் கும்பல் லண்டனில் முகாமிட்டிருப்பதைக் கண்டுபிடிக்கத்தான் அனு தன் குடும்பத்துடன் லண்டன் வந்துவர் என்றும் தெரிய வருகிறது.

குழந்தை மீதான பாசமும், நாட்டின் மீதான நேசமும் கொண்ட அனுஹாசன் எப்படி தீவிரவாதக் கும்பலையும், அதன் தலைவனையும் பிடிக்கிறார்… அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே பரபர விறுவிறு மீதிக்கதை.

உண்மையில் தமிழ் சினிமா எத்தனையோ தீவிரவாதம் பற்றிய படங்களை தந்திருந்தாலும் ‘விஸ்வரூபம்’ ஸ்டைலில் முழுக்க முழுக்க தீவிரவாதம், அந்தக் கும்பலின் திட்டங்கள், அதனை முறியடிக்க இந்திய ராணுவம் செய்யும் ஆபரேஷனின் வீரியம் என்று மிக டீடெயிலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் என்.டி.நந்தா. இயக்குனர் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லரை இயக்கியிருப்பது சர்ப்ரைஸ்.

அனுஹாசன். மக்களோடு மறைந்து வாழும் பெண் உளவாளி, ராணுவ உடை அணிந்த மிடுக்கான ராணுவ வீராங்கனை என்று இரு பரிமாணங்களில் வித்தியாசம் காட்டி, தன் கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். அதே சமயம் கணவன், குழந்தை மீது கொண்டுள்ள பாசம், தன் குடும்பத்தை அழித்தவர்களை அழிக்கக் கிளம்பி லண்டன் நகரில் அலையும் ஆவேசம் என தான் ஒரு தேர்ந்த நடிகைதான் என்பதை அழுத்தமாகவே மீண்டும் நிரூபித்துள்ளார். என்ன ஆங்காங்கே பல இடங்களில் அனுஹாசன் முகத்தில் கமலின் ரியேக்ஷன்கள். 

அனுஹாசனுக்கு அடுத்து நாசர். மனிதர் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நடிப்பில் சலிப்போ, அல்லது பார்க்கும் நமக்கு அலுப்போ ஏற்படவே இல்லை. அனாயசமாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

குழந்தை அஞ்சலியின் பங்கும் சிறப்பு.

படத்தில் மைனஸ் என்று பார்த்தால் வேகமான விறுவிறுப்பான திரைக்கதைதான் என்றாலும் காட்சிகள் பல மாண்டேஜ்களாகவே இருப்பது உறுத்தல்.

முத்துக்குமார சாமியின் பின்னணி இசை கூடுதல் பலம். 

மொத்தத்தில்

‘வல்ல தேசம்’ – நல்ல தேசம்.

You might also like More from author