‘துப்பறிவாளன்’ – விமர்சனம்

இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்து விஷால் கதாபாத்திரத்தையும், கதையையும் அமைத்திருக்கிறார் மிஷ்கின்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் தனது கணவரின் பிறந்தநாளை தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் சிம்ரன். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி, சிம்ரனின் கணவனும், மகனும் இறக்கிறார்கள். சில நாட்கள் கழித்து உயர் போலீஸ் அதிகாரியான நரேன் கமிஷனர் மீட்டிங்கில் மயங்கி, வாயில் ரத்தம் வர, அப்படியே இறக்கிறார். இந்நிலையில் துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனனான விஷால் தனக்கு எந்த சுவாரஸ்யமான கேஸும் கிடைப்பதில்லை தன் நண்பனும், உதவியாளருமான பிரசன்னாவிடம் எரிந்து விழுகிறார். அப்போது அவருக்கு ஐம்பது லட்சம் பணம் வரும் அளவுக்கு ஒரு கேஸ் வர, அதனை மறுக்கிறார் விஷால். ஆனால் ஒரு சிறுவன் தன்னுடைய நாய்க் குட்டி இறந்துபோய் விட்டதாகவும், அதனை கொன்றவர்களை கண்டுபிடித்துத் தருமாறும் கேட்க, விஷால் உடனே துப்பறியத் தொடங்குகிறார்.

இந்தத் துப்பறிதலின் விளைவாக விஷால் கண்டுபிடிக்கும் அதிபயங்கர கொலைக் கும்பலும், அவர்களின் ஈவு இறக்கமற்ற கொலைகளையும் தெரியவர, விஷால் தங்களை நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளும் அந்தக் கும்பலுக்கும், விஷாலுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே மீதிக்கதை.

இதுவரை வந்த மிஷ்கின் படங்களிலேயே ரசிகர்கள் அனைவருக்குமான கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் மிஷ்கின். படத்தில் ஒரு பாடல் கூட இல்லாவிட்டாலும் ஐந்து அதிரடியான விதவிதமான சண்டைக் காட்சிகளின் மூலமும், தன்னுடைய சிறப்பான கதை சொல்லல், மற்றும் மேக்கிங் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார். தமிழில் முதல் முறையாக ஒரு முழுமையான துப்பறியும் படத்தைத் தந்த மிஷ்கினுக்கு பாராட்டுக்கள்.

அதே சமயம் அப்படிப்பட்ட கொலைக்கும்பலின் பின்னணியையும், கொலைகளுக்கான காரணத்தையும் சுவாரஸ்யப் படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  

மிஷ்கினின் துப்பறிவாளன் கதாபாத்திரமான கணியன் பூங்குன்றனாகவே வாழ்ந்திருக்கிறார் விஷால். இந்தப் படத்தின் மூலம் இதுவரை விஷாலை பிடிக்காதவர்களுக்குக் கூட பிடிக்கும் அளவிற்கு தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அளவோடு அடக்கத்தோடு உள்வாங்கி நடித்திருக்கிறார். அவரது உதவியாளராக பிரசன்னா. கனகச்சிதம். தனக்கான களம் குறைவாக இருப்பதை உணர்ந்து விட்டுக் கொடுத்து நடித்துள்ளார்.

அறிமுகமாக அனு இமானுவேல். பிக்பாக்கெட் திருடியாகவும், விஷாலின் வேலைக்கார காதலியாகவும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

இவர்களுக்குப் பிறகு ஆச்சரியத்தை அளிப்பவர் வினய். சாக்லேட் பாய் முகத்திற்குள் இப்படியொரு கொடூர கொலைகாரனாக மிரட்டியுள்ளார்.

சிம்ரன், ஆண்ட்ரியா, பாக்யராஜ், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், நரேன், அபிஷேக், ஷாஜி, வின்சென்ட் அசோகன் என அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார்கள்.

மிஷ்கின், விஷால் உழைப்பிற்குக் கை கொடுத்திருப்பது அரோல் கொரோல்லின் பின்னணி இசையும், காரத்தின் ஒளிப்பதிவும் என்றால் அதில் துளி கூட மிகை இல்லை.

மொத்தத்தில்

‘துப்பறிவாளன்’ – உற்சாகமான ரோலர் கோஸ்டர் பயணம்  

You might also like More from author

%d bloggers like this: