‘’நான் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’ – விஷால் அதிரடி

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷாலிடம் ‘’நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா…? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நிச்சயம் வருவேன்’’ என்றார்.

‘’மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்கள் போல, கடவுள் ஆசைப்பட்டால் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நேரடியாகச் சொல்கிறேன், தேவை ஏற்பட்டால், ஆம், நான் அரசியலுக்கு வருவேன். அதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களும் என்னை அவர்களுடன் இணைய அழைத்திருக்கிறார்கள். அதே சமயம், அரசியலை மாற்றுத் தொழிலாக வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் எனக்கு எந்த ரகசியம் நோக்கமும் கிடையாது.

மக்கள் ரேஷன் கார்ட், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்தாலே போதும். ஆனால் எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லையே. அரசியல்வாதிகள் அவர்கள் வேலையைச் செய்தால் ஏன் என்னைப் போன்ற நடிகர்களை அரசியலுக்கு அழைக்கப் போகிறார்கள்?

சில விஷயங்களை அரசியல்வாதிகளால் மட்டுமே சாதிக்க முடியும். அதனால்தான் அவர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தந்திருக்கிறோம். இன்றைக்கு யாரையும் நாம் ஏமாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் இலவசங்கள் கொடுத்து வாக்குகள் பெற்று ஜெயிக்கலாம் என்று நினைத்தால் அப்போது வெற்றிக்கான வாய்ப்பு குறைவே’’ என்று வெளிப்படையாகவே கூறினார்.

 

You might also like More from author

%d bloggers like this: