‘’அனைவரும் கல்வி பயின்று பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே சாதி ஒழியும்’’ – உ’றியடி’ விஜயகுமார்

அனிதா போன்ற தமிழ் மாணவர்களை ‘பலி’வாங்கும் மத்திய அரசின் நீட் தேர்வுப் பிரச்சினை கடந்த பத்து நாட்களாக பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. மத்திய அரசோ தமிழ் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற இத்துப்போன அறிக்கையை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ‘உறியடி’ படத்தின் மூலம் சாதி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுத்த விஜயகுமார் ‘’கல்வி பயின்று பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே சாதி ஒழியும்’’ என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

‘’கிராமப்புரத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அந்த பாடதிட்டத்தை பயில்வதால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா? இல்லையெனில் அவர்களின் மேற்படிப்பு லட்சியத்தை நீட் தட்டிப் பறிக்கிறது என்பது தானே உண்மை. வறுமையிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் அவர்களின் கனவை சிதைக்கிறது என்பது தானே நிதர்சனம்.

இது தவறு எனும்போது அதற்கு எதிராக போராட வெண்டியது தானே கடமை. அன்றாட வாழ்க்கை இன்னல்களுக்கு இடையே போராட முடியாதவர்கள், மக்கள் சேவை செய்பவர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகளிடம் நமக்காக போராட வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் கூறிய படி, அமைதியாகப் போராட அவர்களின் சமூக ஊடகங்களின் வாயிலாக கோரிக்கை வைக்க வேண்டும்.

பொழுதுபோக்கைத் தவிர்க்க முடியாதெனும்போது, தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் சார்ந்த விஷயங்களை ஆதரிக்கலாமே.

பொழுது போக்கு விஷயங்களை trend செய்யும் போது நம்மை ஏளனமாகப் பார்ப்பது போலாகி விடாதா.

சாதியின் பேரால் நாம் பிரிவு பட்டு பேசுவது வேதனையான விஷயமாகியுள்ளது. எந்த சாதியினரோ, மதத்தினரோ, பின்னால் வரும் அனைவரும் ஒழுங்காக வாகனம் ஓட்டினால் தான் நாம் உயிரோடு வீடு சென்று சேர முடியும். உயிர் காக்கும் மருத்துவர் வேறு சாதி / மதத்தினவர் என்பதாலோ, தானமாகக் கிடைக்கும் உடல் உறுப்புகள் / இரத்தம், வேறு சாதி / மதத்தவருடையது என்பதாலோ அவர் தயவு வேண்டாம் என எவரும் உயிரை விட்டு விடப் போவதும் இல்லை.

ஒருவரை ஒருவர் சார்ந்தது தான் வாழ்க்கை. இங்கே எவர் ஒருவரும் எவருக்கும் உயர்ந்தவரும் இல்லை, எவருக்கும் தாழ்ந்தவரும் இல்லை. நாம் இந்த குறிப்பிட்ட சாதி/மதத்தில் தான் பிறக்க வேண்டும் என முடிவு செய்ய முடியுமா?

சாதி/மத பாகுபாட்டு எண்ணங்களை தவிர்ப்பதே சாதி ஒழிப்பிற்கான வழி. சாதி அரசியல் செய்பவர்கள் உண்மையில் அந்த சாதி மக்கள் முன்னேற்றத்திற்காக செய்கிறார்களா என்பதை நமக்குள் சிந்தித்துப் பார்ப்போம்.

பொருளாதார ரீதியாக அனைவரும் முன்னேறுவது தான் சாதி ஒழிப்பிற்கு வழி வகுக்கும். அதற்கு அனைவரும் கல்வி பெறுவதே தீர்வு. இந்திய அரசியல் அமைப்பு அனைவருக்கும் தரமான வாழும் உரிமையை உறுதி அளிக்கிறது. அதில் கல்வியும், மருத்துவமும் இடம் பெற வலியுறுத்துவோம். அது வியாபாரமாக்கப் படுவது தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: