எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ துப்பறியும் படங்கள் வெளிவந்துள்ளன. துப்பறியும் படங்களில் நடித்ததால் ஜெய்சங்கர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இவையெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ரக அதிரடி சாகசப் படங்களாகத்தான் அமைந்தன. முழுக்க முழுக்க மதிநுட்பம் துணைகொண்டு நுண்ணிய துப்புக்களை வைத்தே குற்றவாளிகளை நெருங்கும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் வகை படங்கள் தமிழில் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இந்த குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையை தருகிறது ‘துப்பறிவாளன்’ படம். மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், அனு இமானுவேல், சிம்ரன், ஆண்ட்ரியா, பாக்யராஜ், ஜான் விஜய் என முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ல்ஸ் வகை அக்மார்க் துப்பறியும் படம் என்பதை பறைசாற்றுகின்றன. டிரெயிலரில் வரும் வசனங்களும், பின்னணி இசையும், சீனக் கலைஞர்களுடனான குங்ஃபூ சண்டைக் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

டிரெயிலரில் இருக்கும் பரசவ உணர்வை படத்திலும் இயக்குனர் மிஷ்கின் ஏற்படுத்தினால் நிச்சயம் ‘துப்பறிவாளன்’ தமிழ் சினிமாவின் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் இது இன்னொரு ‘முகமூடி’யாகவே அமையும் என்பதற்கும் மறுப்பில்லை. எது எப்படியோ இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

You might also like More from author