‘ஒன் ஹார்ட்’ – இதயம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

இரண்டு ஆஸ்கர்களை அள்ளினாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் தேடல் மட்டும் குறைந்தபாடில்லை. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தாலும் தற்போது ‘ஒன் ஹார்ட்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 8-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தின் ப்ரோமொஷன்களில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

‘’கடவுள் எனக்கு நல்ல சக்தியைக் கொடுத்திருக்கிறார். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், டாப் 5 இடத்தில் நான் வர வேண்டும், என் பாடல்கள் பேசப்பட வேண்டும் என்ற குறுகிய மனநிலையில் இருக்க விரும்பவில்லை. புதிய முயற்சிகள் செய்ய ஆசைப்படுகிறேன். இன்னும் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.

ஒரு சமையல்காரர் தனது சமையலை முதலில் ருசித்திப் பார்ப்பார். அதே மாதிரி என் இசையை நான் முதலில் சோதித்துப் பார்ப்பேன். எனக்கு கேட்பதற்கு போரடித்தால் அந்த ட்யூனை படக்குழுவினரிடம் கொடுக்க மாட்டேன். புதிதாக இருக்கிறது என்று நினைத்தால் அதை பயன்படுத்துவேன். காரணம், ரசிகர்கள் ஒரு பாடலை பல முறை கேட்கிறார்கள். அவர்களுக்கு போரடிக்கக் கூடாது. இப்போது இசையில் இரைச்சல் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். காரணம், இசையை உருவாக்க நேரமில்லை. முன்பு மாதிரி லைவ்வாக இசைக்கருவிகளால் இசை உருவாக்கப்படவில்லை.

மெலடி, கர்நாடக சங்கீதப் பாடல்கள் குறைந்துவிட்டன. கர்நாடக சங்கீதப் பாடல்களுக்கு தகுந்த கதைகள் வந்தால் தான், அந்த மாதிரி இசை உருவாகும். அப்படிப்பட்ட கதைகளை உருவாக்க தயாரிப்பாளர்கள் இல்லை. நான் உருவாக்கிய பாடல்களை ஒரு வாரம் கழித்துக் கேட்பேன். அதில் பலமுறை திருத்தம் செய்வேன். அதனால் மட்டுமே, என் பாடல்கள் உருவாக தாமதமாகிறது. எனக்கு திருப்தியாக இல்லாமல் பாடல்கள் என் இசைக்கூடத்திலிருந்து வெளியே செல்லாது’’ மிகவும் வெளிப்படையாகக் கூறினார்.

You might also like More from author

%d bloggers like this: