‘புரியாத புதிர்’ – விமர்சனம்

நான்கு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட ‘மெல்லிசை’ படம்தான் பல பிரச்சினைகளுக்குப் பிறகு ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் விஜய் சேதுபதி, காயத்ரி, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது.

மியூசிக் டைரக்டராக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மியூசிக் கருவிகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கே வயலின் வாங்க வரும் காயத்ரியோடு நட்பு கொள்கிறார். அந்த நட்பு நாளடைவில் தீவிர காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிக்கின்றனர். இந்நிலையில் காயத்ரியை அவர் தங்கியுள்ள அபார்ட்மென்டில் யாரோ மர்ம நபர் பின்தொடர்கிறார். ஒரு முறை அவர் துணிக்கடையில் ட்ரெஸ் மாற்றும் வீடியோ ஒன்று விஜய் சேதுபதிக்கு வருகிறது. அதிர்ச்சியாகும் அவர் காயத்ரியிடம் சொல்ல அவர் தற்கொலைக்கு முயல்கிறார். பிறகு விஜய் சேதுபதியின் இரு நண்பர்களில் ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான். இன்னொரு நண்பன் போதைப் பொருள் விவகாரத்தில் போலீஸில் சிக்க வைக்கப்படுகிறான். இந்நிலையில் காயத்ரியின் நிர்வாண குளியல் வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது. இன்னொரு முறை காயத்ரியுடன் படுக்கையில் இருக்கும் அந்தரங்க வீடியோ ஒன்றும் வருகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் விஜய் சேதுபதிக்கு தெரிய வரும் உண்மை என்ன என்பதே ‘புரியாத புதிர்’.

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் தவறும், தப்பும் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் கிடையாது. அந்தத் தவறையும், தப்பையும் தெரிந்தும் தடுக்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகள்தான் என்ற ஆறாம் சார்ந்த கதைக்கருவை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.

விஜய் சேதுபதி இயல்பாக நடித்திருந்தாலும் நான்கு வருடத்திற்கு முந்தையப் படம் என்பதால் சில இடங்களில் அந்த இயல்பே உறுத்தலாக உள்ளது. மற்றபடி வழக்கமான கலகல விஜய் சேதுபதி நம்மைக் கவருகிறார்.

காயத்ரி விஜய் சேதுபதியைவிட கனமான கேரக்டரில் கனமான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார். காயத்ரியின் திரைவாழ்வில் புரியாத புதிர் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல் படம்தான்.

மகிமா நம்பியார் சில காட்சிகளே வந்தாலும் அசத்தல்.

அர்ஜுன், ரமேஷ் திலக் ஆகியோரும் கதைக்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.

ஷாமின் இசையில் மெல்லிசையாக வருடினாலும் அதே இசை பிரவாகம் எடுத்து கதையின் வேக ஓட்டத்திற்குத் துணைபுரிந்துள்ளது.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் த்ரில் அதிகம்.

மொத்தத்தில்

‘புரியாத புதிர்’ – ‘ஜிலீர்’ விளையாட்டு.

You might also like More from author

%d bloggers like this: