‘குரங்கு பொம்மை’ – விமர்சனம்

‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தின் மூலம் உலக நாயகன் கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட நித்திலன் எழுதி, இயக்கி வெளிவந்திருக்கும் படம்தான் ‘குரங்கு பொம்மை’. ஏற்கனவே அவர் இயக்கிய ‘புதிர்’ என்ற குறும்படத்தின் விரிவான படமே ‘குரங்கு பொம்மை’. இந்தப் படத்தில் பாரதிராஜா, விதார்த், தேனப்பன், குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தஞ்சாவூரில் மரத்தொழில் அதிபர் போர்வையில் தாதாவாக வாழ்ந்து வரும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் அவரது பால்ய நண்பனான பாரதிராஜா. மகன் விதார்த் உள்ளிட்ட அவர் குடும்பமே தேனப்பனிடம் வேலை செய்வதை எதிர்த்தாலும் நட்புக்காக அவரிடமே இருக்கிறார். ஒருமுறை ஐந்து கோடி மதிப்புள்ள பொன்சிலை ஒன்றை சென்னையில் குறிப்பிட்ட நபரிடம் சேர்க்க நம்பிக்கையுள்ள நண்பன் பாரதிராஜாவிடம் ஒரு குரங்கு பொம்மை படம் போட்ட பேக்கில் வைத்து கொடுத்து விடுகிறார். ஆனால் சில திகீர் வேலைகளால் அந்த பேக் சென்னையில் வேலை செய்யும் விதார்த் கையில் கிடைக்கிறது. பிறகு அந்த பேக்கை பறிக்க சென்னையின் பிக்பாக்கெட் திருடன் உள்ளிட்ட சிலர் முயல்கின்றனர். இறுதியாக அந்த பேக் என்னானது, யார் கையில் சிக்கியது என்ற கேள்விக்கு க்ளைமாக்ஸ் நெஞ்சை உலுக்கும் க்ளைமாக்ஸ் மூலம் விடை சொல்லியிருக்கிறார் நித்திலன்.

வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் அறிமுகமாகியிருக்கும் நித்திலனை கைதட்டி வரவேற்கலாம். திரைக்கதையில் செய்திருக்கும் சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்கள் ‘அட’ போட வைக்கின்றன. உதாரணத்திற்கு பழுதான பழைய போலீஸ் ஸ்டேஷன் சீக்குவன்ஸ். அதே சமயம் காதல் காட்சிகளும், மூன்றாம் முறையாக வரும் பிளாஷ்பேக் உத்தியும் நன்றாகவே இருந்திருக்கலாம்.

மொத்தப் படத்திலும் முதலாவதாக நிற்பவர் பாரதிராஜாதான். அப்பாவி நண்பன் கேரக்டரில் பிரித்து மேய்ந்திருக்கிறார். இயக்குவதில் மட்டும் இமயம் அல்ல நடிப்பிலும்தான்.

விதார்த்திற்கு நிச்சயம் இந்தப் படம் தரம், வியாபாரம் இரண்டிலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் படம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

தாதா நண்பன் கேரக்டரில் தேனப்பன் மிரட்டல். பிசிறில்லாத கச்சிதமான நடிப்பு.

நாயகி டெல்னா டேவிஸ். அழகான அளவான நடிப்பில் நம்மை கவர்கிறார்.

இப்படத்தில் பிக்பாக்கெட் திருடனாக அறிமுகமாகியிருக்கும் கல்கி கவனிக்கப்படுகிறார்.

தேனப்பனைப் போலவே இன்னொரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் குமரவேலின் கேரக்டரும், அவரின் பகீர் நடிப்பும்தான்.

உதயகுமாரின் ஒளிப்பதிவும், அஜநீஷ் லோக்நாத் இசையும் படத்தின் பலம். அதே சமயம் பல காட்சிகள் 5டி கேமராவில் எடுத்துள்ளதால் நிறைய இடங்களில் உறுத்தல்.

அபினவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங் கனகச்சிதமாக ஒன்னே முக்கால் மணி நேரத்தில் நித்திலனின் திரைக்கதையை சுருக்கி நறுக்கி நமக்குத் தந்திருக்கிறார்.

மொத்தத்தில்

‘குரங்கு பொம்மை’ – தமிழ் சினிமாவின் முக்கியமான படம்

You might also like More from author

%d bloggers like this: