‘விவேகம்’ – விமர்சனம்

வீரம், வேதாளம் என்ற இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த சிவா அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம்தான் விவேகம். படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைத்ததற்குப் பதில் வேகம் என்று வைத்திருக்கலாம். அவ்வளவு வேகம்… ஆனால் விவேகம்…?

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரஷ்ய போதை மருந்துக் கும்பல் தலைவனும், தீவிரவாத தலைவனும் போடும் திட்டத்தைத் தூள் தூளாக்கியபடியே அறிமுகமாகிறார் அஜித். அவர் இன்டர்போல் அதிகாரியா, இந்திய உளவாளியா, அல்லது ராணுவ அதிகாரியா என்று சத்தியாமாக தெரியவில்லை. படம் பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அஜித் உயிரோடுதான் இருக்கிறார் என்று விவேக் ஓபராய் உள்பட அவரது நண்பர்கள் டீம் மகிழ்கிறது. அப்படியே ஃப்ளாஷ்பேக் போனால் நாட்டையே நாசமாக்கும் சதிவேலையை முறியடிக்க இந்த டீம் முயல்கிறது. ஆனால் அஜீத்தைத் தவிர அனைவருமே நாசவேலைக்கு உடன்பட்டவர்கள் என்பதுதான் டிவிஸ்ட். அஜித்தை சுட்டு வீழ்த்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் செத்துவிட்டார் என்று நினைத்தவர் எப்படி மீண்டும் வந்து கெத்துக் காட்டுகிறார் என்பதே மீதிக்கதை.

யாருமே எதிர்பார்க்காத வகையில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் திமிறிக் கொண்டு வந்திருக்கிறார் அஜித். படம் முழுக்க ஓடுகிறார். தாவுகிறார். பறக்கிறார். அடிக்கிறார். சண்டை போடுகிறார். அஜித்தின் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒவ்வொரு பிரேமிலும் அபாரம். அதுவும் வெற்றுடம்புடன் அவர் போடும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால். அவர் ஸ்கூல் டீச்சரா இல்லை ஹோட்டல் அதிபரா என்றெல்லாம் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். எங்களுக்கு தெரியவில்லை. மொத்தத்தில் அவர் அஜித்தின் அன்பு மனைவியாக வருகிறார். மணாளனே மங்கையின் பாக்கியம் படத்திற்கும் இந்த கணவன் மனைவி போர்ஷனுக்கும் முடிந்தால் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இருந்தாலும் காஜல் அகர்வால் இதுவரை அவர் நடித்ததாக சொல்லப்பட்டப் படங்களில் அவர் ‘காட்டி’த்தான் இருந்தார். முதல் முதலில் நடித்திருக்கிறார்.

வில்லனாக விவேக் ஓபராய். தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலக சினிமாவிலேயே முதல் முறையாக தன் எதிரியான ஹீரோவை படம் முழுக்கப் புகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர். ஒரு கட்டத்தில் இவர் வில்லனா, இல்லை சைதாப்பேட்டை அஜித் ரசிகர் மன்றத் தலைவரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆறுதலாக அக்ஷரா ஹாசன். கால் மணி நேரமே வந்தாலும் கச்சிதமான கேரக்டர். அளவாக நடித்துள்ளார்.

கருணாகரன் படத்தின் ட்ரெயிலரில் வந்ததை விட ஒன்றரை நிமிஷம் அதிகமாக வருகிறார்.

‘வீரம்’ படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து, வேதாளத்தில் ஆழம் பார்த்த இயக்குனர் சிவா இதில் அகலக் கால் வைத்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. செம ரேசியான ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் படத்தை உருவாக்க நினைத்ததும், அதற்கான இமாலய உழைப்பைக் கொட்டியதெல்லாம் நல்ல விஷயம்தான். அதற்காக கதை என்ற ஒன்றே இல்லாமலேயே அஜித்தின் எல்லாப் படங்களிலும் வரும் அதே நட்பு, முதுகில் குத்தும் துரோகம் என்ற புளித்தப் போன ஒன்றையே இரண்டரை மணி நேரமும் இழுப்பதெல்லாம் நிச்சயமாக அது ‘விவேகம்’ இல்லை.

அஜீத்திற்குப் பிறகு ஏன் அஜித்திற்கு ஒருபடி மேலாகவே உழைப்பைக் கொட்டியவர் ஒளிப்பதிவாளர் வெற்றிதான். படம் முழுக்க ரேஸ் கார் போன்ற வேகத்தில் கேமரா பறக்கிறது. அதுவும் அத்தனை ஷாட்ஸ், அத்தனை ஆங்கிள்ஸ்,… வெற்றிக்கு அடிக்கலாம் கம்பீர சல்யூட்.

அனிருத் இசையில் பாடல்கள் மிரட்டல். பின்னணி இசையில் நம்மையும் படத்தின் வேகத்தோடு ஒன்ற வைக்கிறார்.

வெற்றி எடுத்த அத்தனை ஃபுட்டேஜ்களையும் சரியான வகையில் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார் ரூபன்.

அஜித், வெற்றி, அனிருத், ரூபன் இப்படி அனைவரோடு சேர்ந்து ஒரு ஹாலிவுட் தர ஆக்ஷன் படத்தைக் கொடுக்க நினைத்த சிவா அதற்கான கதை, திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ‘விவேகம்’ அமோகமாக இருந்திருக்கும். ஆனால் வெறும் வேகம்தான் உள்ளதால் சலிப்பும், அலுப்பும் ஏற்படுவதுதான் சோகம்.

மொத்தத்தில்

‘விவேகம்’ – ‘தலைப்பில் மட்டுமே.

You might also like More from author

%d bloggers like this: