‘தரமணி’ – விமர்சனம்

தாய்மொழியை கல்வியாக பயிலும் இளைஞனின் சோகத்தை ‘கற்றது தமிழ்’ படத்திலும், குருட்டுத்தனமும், முரட்டுத்தனமும் நிறைந்த இன்றைய பள்ளிகளின் கல்விமுறையையும், குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரின் கவனக்குறைவையும் ‘தங்க மீன்கள்’ படத்திலும் அலசிய இயக்குனர் ராம் உலகமயமாக்கலின் விளைவால் இன்றைய சமூகத்தில் இருவேறு நிலைகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலில் நிலவும் உறவுச் சிக்கல்களையும், உளவியல் சிக்கல்களையும் பிரித்து மேய்ந்திருக்கும் படம்தான் ‘தரமணி’.

தனது காதலி வெளிநாடு போவதற்காக வேண்டிய பணத்தை திருடிக் கூடக் கொண்டு வரும் வசந்த் ரவி அதே காதலியால் ஏமாற்றப்பட்டு, கபோதியாக சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு அடைமழை நேரத்தில் ரோட்டோரம் ஒதுங்கிய ஐ.டி.பெண் ஆண்ட்ரியாவிடம் தனது கதையை தானாகவே முன்வந்து சொல்கிறார். முதலில் இரக்கம், பிறகு மயக்கம் என அவரிடம் காதலில் விழுகிறார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து ஒரு சிறுவயது மகனோடு வாழ்பவர். ஒரு அபார்ட்மெண்டில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, மகன் என மூவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர்.

வேலை ஏதும் போகாமல் இருக்கும் வசந்த் ரவிக்கு ஆண்ட்ரியாவின் ஐ.டி.வேலை, அவர் நடை, உடை, பேச்சு, நடத்தை என எல்லாவற்றிலும் சந்தேக உறுத்தல் ஆரம்பிக்கிறது. இதன் விளைவால் அடிக்கடி ஆண்ட்ரியாவோடு சண்டையிட, ஒரு கட்டத்தில் சண்டை முற்றி, ஆண்ட்ரியாவால் துரத்தப்பட்டு மீண்டும் நடுரோட்டிற்கு வருகிறார். ஆண்ட்ரியாவின் மேலுள்ள வெறுப்பால் மற்றப் பெண்களையும் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு பைத்தியகாரத்தனமான செயலில் இறங்க, அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிக்கதை.

படத்தின் முதல் காட்சியிலேயே ராமின் வாய்ஸ் ஓவர் ஆரம்பிக்கிறது. இந்தக் கதைக்குச் சம்பந்தமில்லாமலும், அதே சமயம் சம்பந்தபப்டுத்தியும் படம் முழுக்க வரும் அவரின் வாய்ஸ் ஓவரில் இருக்கும் எள்ளலும், துள்ளலும், கலக்கமும், கவலையும் நம்மை பலவிதச் சிந்தனைகளுக்கு ஆட்படுத்துகிறது. மேலோட்டமாக இன்றைய நவநாகரிக மாற்றத்தால் பெண்கள் எப்படியெல்லாம் ஆண்களின் தொல்லைகளுக்கு உட்படுகிறார்கள் என்பதைச் சொன்னாலும், இந்தியா தோற்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்யும் தாய்மார்கள், கட்டிட வேலைக்கு வந்து விபத்தில் அனாதைப் பிணமாகும் பீகார் தொழிலாளி, காதலனை ஏமாற்றிவிட்டு பாவமன்னிப்பாக அவனோடு படுக்கையில் படம் எடுத்துக் கொள்ளும் அஞ்சலி, ரயில்வே போலீசாக வரும் அழகம் பெருமாள், போலீஸ் அதிகாரியாக வரும் ஜே.எஸ்.கே, அவர் மனைவி, ஆண்ட்ரியாவின் மகன், அழகான வெள்ளைப்புறா என ராம் காட்டியிருக்கும் ஒவ்வொருவரின் கதையும் அழகான, நெகிழ வைக்கும் சிறுகதைகள் என்றே சொல்லலாம்.

அதேபோல் முதல் இரண்டு படங்களிலும் இல்லாத கமர்ஷியல் அம்சங்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்தப் படத்தில் வைத்துவிட்டார் ராம். அப்படி அவர் வைத்த கமர்ஷியல் விஷயங்களில் பலமுறை க்ளாப்ஸ் அள்ளும் கமர்சியல் அம்சம் அவரது வாய்ஸ் ஓவர்தான்.

வசந்த் ரவி. முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் இயக்குனர் ராமின் பேச்சு, உடல்மொழியை பின்பற்றினாலும் நன்றாகவே தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் சில இடங்களில் தடுமாற்றம்.

நாயகியாக ஆண்ட்ரியா. உலகமயமாக்கலின் விளைவால் நவநாகரிக மங்கையாக தனித்தன்மையோடும், தைரியத்தோடும் வாழும் கேரக்டர். அட்டாகாசப்படுத்தியிருக்கிறார். வசந்த் ரவி, அவரது ஹோமோ கணவன், கம்பெனி பாஸ், பாசமகன் என அனைவருக்கும் வேறுவேறுவிதமான பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தும் ஆண்ட்ரியாவிற்கு நிச்சயம் இது லைம்டைம் கேரக்டர் என்றால் மிகையல்ல.

அஞ்சலி, அழகம்பெருமாள், ஜே.எஸ்.கே, ஆண்ட்ரியாவின் மகன், ஆண்ட்ரியாவின் அம்மா, கம்பெனி பாஸ், ‘அது’க்கு ஆசைப்பட்டு தறிகெட்டு அலையும் அழகான ஆண்ட்டி என பலரும் தங்கள் பங்கை சிறப்பாக தந்து இந்த தரமணியை தரம் உயர்ந்த மணியாக உயர்த்தியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பபெரும் பலங்கள் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும்தான்.

மொத்தத்தில்

‘தரமணி’ – தமிழ் சினிமாவின் ‘தங்க மீன்’

You might also like More from author

%d bloggers like this: