‘வேலையில்லா பட்டதாரி 2’ – விமர்சனம்

மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திர கனி, விவேக் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து, இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதை

‘வேலையில்லா பட்டதாரி’யின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கிறது படம். காதலியான அமலா பால் தனுஷின் மனைவியாக குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார். அப்பா. தம்பி, நண்பர்கள், தனது அனிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை என்று நிம்மதியாக வாழ்ந்து வரும் தனுஷை தனது கம்பெனிக்கு இழுக்க முடிவெடுக்கிறார் வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனியின் முதலாளி கஜோல். ஆனால் பழசை மறக்காத தனுஷ் அந்த வேலையை மறுத்து, அனிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸிலேயே வேலை செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல, கஜோலுக்கு ஈகோ தலைதூக்குகிறது. அடுத்ததாக கஜோலுக்கு வரவேண்டிய ஒரு ப்ராஜெக்டை தன் இயல்பான நல்ல குணத்தால் தனுஷ் பறித்துவிட, கடுப்பாகும் கஜோல் தனுஷை கட்டம் கட்ட ஆரம்பிக்க, தனுஷ் திருப்பி பதிலடி கொடுக்க, பிரச்சினை முற்றிப்போகிறது. இறுதியில் தனுஷ் கஜோலை வென்றாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

நல்ல கதைக்கருவை கொண்ட இப்படத்தின் பெரிய பலவீனம் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உப்புச் சப்பில்லாத திரைக்கதைதான். கஜோல், தனுஷின் இன்ட்ரோ ஓகே. ஆனால் தினமும் குடித்துவிட்டு தனுஷை அமலா பால் கரிச்சுக் கொட்டும் காட்சிகள் ரிப்பீட் ஆகியே நமக்குத் தலைவலியை ஏற்படுத்துகின்றன. கஜோலுக்கும் தனுஷிற்குமான மோதல் வருவதற்கு அழுத்தமான காரணமும் இல்லை. அப்படி மோதல் வந்த பிறகும் இருவருக்கும் காரசாரமான சண்டையோ வாதமோ இல்லாததால் அச்சாணி கழன்ற மாட்டுவண்டி போல தறிகெட்டு விழுகிறது படம். ஆடியன்ஸ் ‘தேமே’ என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாவது பெரிய பலவீனம் இசையும், பின்னணி இசையும். உண்மையில் ஒரு பாடல்கூட ரசிக்கிற மாதிரியோ, முணுமுணுக்கிற மாதிரியோ இல்லை. பின்னணி இசை மந்தம். ஷான் ரோல்டன் திறமையான இசையமைப்பாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் கிளாஸ் படத்தில்தான் சாதிக்கிறார். கமர்ஷியல் படம் அவருக்கு அவ்வளவாக பிடிபடவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

தனுஷ் நடிப்பில் கில்லிதான் என்பதை இந்தப் படத்திலும் வழக்கம் போல நிரூபித்திருக்கிறார். ஆனால் ஏனோ உற்சாகமான பழைய தனுஷ் மிஸ்ஸிங்.

கஜோல். திமிரான, கர்வம் பிடித்த தொழிலதிபர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தவும் செய்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். ஆனால் அவரது நடிப்புக்குத் தீனி போடுவதுபோலான ஒரு சீன்கூட படத்தில் இல்லை என்பதுதான் சோகம்.

அமலா பால், சமுத்திர கனி, விவேக், சரவண சுப்பையா, பாலாஜி மோகன் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவு செய்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் சுரபியின் வேடத்தில் ரீது வர்மா. அழகுப் பதுமை. மற்றபடி இவருக்கு பெரிய வேலையெல்லாம் இல்லை.

ஒளிப்பதிவு, எடிட்டிங்கும் கனகச்சிதம்.

மொத்தத்தில்

‘வேலையில்லா பட்டதாரி 2’ – நம் நேரத்தை வீணடிப்பவன்.

You might also like More from author

%d bloggers like this: