‘மீசைய முறுக்கு’ – விமர்சனம்

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ தமிழா. ஆனால் ஹீரோவாக மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் தானே செய்திருக்கும் படம்தான் ‘மீசைய முறுக்கு’.

விவேக்கிற்கு இரண்டு மகன்களில் ஒருவரான ஆதி சிறுவயது முதலே நண்பர்களுடன் ஜாலி, கேலி, கிண்டல், நக்கல் என வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு இசையின் மீது தீராக் காதல். ஒரு கட்டத்தில் இவரின் சேட்டை அதிகமானதால் கோயமுத்தூர் காலேஜில் விவேக் இவரை சேர்த்து விட, அங்கேயும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். காலேஜ் தருணத்தில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கும் முடிவுக்கு வரும் ஆதி தனது அப்பா விவேக்கிடம் அனுமதி வாங்கி ஒரு வருடம் சென்னைக்கு வந்து தனது லட்சிய முயற்சியில் ஈடுபடுகிறார். ஆதி ஜெயித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

முதல் படத்திலேயே சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் ஆதி. அனேகமாக அவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களையே பெரும்பாலான சீன்களில் வைத்திருப்பதை உணர முடிகிறது. அவற்றையும் ரசிக்கும் விதத்தில் போரடிக்காத திரைக்கதை மூலம் சொல்லியிருப்பது சிறப்பு. விக்ரமன் ஸ்டைல் வசனங்கள் ‘அட’ போட வைக்கின்றன. இயக்கத்தில் மட்டும் இன்னும் மெனக்கெட வேண்டும்.

ஹீரோயின் ஆத்மிகா ஆதியின் காதலியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆதியின் அப்பாவாக விவேக்கிற்கு நிச்சயம் இந்தப் படம் வித்தியாசமான நடிப்பு அனுபவம்தான்.

ஆதியின் நண்பராக வரும் விக்னேஷின் காமெடி பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியுள்ளது.

அதேபோல் இசையமைப்பாளர் ஆதியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

முதல் பாதியின் நீளத்தை மட்டும் எடிட்டர் கொஞ்சம் நறுக்கியிருந்தால் மீசை இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்

‘மீசைய முறுக்கு’ – கம்பீரம்.

 

You might also like More from author