‘விக்ரம் வேதா’ – விமர்சனம்

‘ஓரம்போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’ படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியின் இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘விக்ரம் வேதா’. விக்ரமாதித்யன் வேதாளம் புராணக் கதையை  அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் போலீஸ் ஆபிசர் மாதவன் டீமிற்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் 16 கொலைகளை செய்த கேங்க்ஸ்டர் விஜய் சேதுபதி. அவரைப் பிடிக்க மாதவனும், அவரது டீமும் விஜய் சேதுபதியின் ஆட்களை போட்டுத் தள்ளிக் கொண்டே வருகிறார்கள். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியே வாண்டடாக வந்து சரண்டர் ஆகிறார். அப்போது விசாரணையில் மாதவனுக்கு ஒரு கதை சொல்லிவிட்டு, புதிரான கேள்வி ஒன்றைக் கேட்க, மாதவன் திகைக்கிறார். அடுத்த நாள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார் விஜய் சேதுபதி. இப்படி ஒவ்வொரு முறை மாதவனிடம் மாட்டும்போதும், ஒரு கதை சொல்லிவிட்டு மாதவனை  குழப்பிவிட்டுத் தப்பிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி சொன்ன கதைகளை முன்பின் வரிசைகளாக தொகுத்துப் பார்க்கும் மாதவனுக்கு அந்த கொடூரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மை என்ன, மாதவன் விஜய் சேதுபதியை போட்டுத் தள்ளினாரா இல்லையா, க்ளைமாக்ஸ் நடக்கும் மாஸ்டர் டிவிஸ்ட் என்ன என்பதெல்லாம்தான் மீதிக்கதை.

‘ஓரம்போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’ என்று வட சென்னை பின்னணியில் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்கள் புஷ்கர் காயத்ரி. மற்ற இரண்டுப் படங்களும் ஜாலி சவாரி என்றால் விக்ரம் வேதா ரோலர் கோஸ்டர் த்ரில்லர். அதுவும் விக்ரமாதித்யன் வேதாளம் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு கதை, திரைக்கதை அமைத்து ஒவ்வொரு பிளாஷ்பேக், அதன் முடிவில் ஒரு டிவிஸ்ட், ஒட்டு மொத்த படத்திலும் க்ளைமாக்ஸில் சொல்லி அடிக்கும் மாஸ்டர் டிவிஸ்ட் என்று ரகளைப்படுத்தி இருக்கிறார்கள். முதல் காட்சியில் ஏற்பட்ட பரபரப்பும், விறுவிறுப்பும் க்ளைமாக்ஸ் வரை இருப்பது சிறப்பு. அதே சமயத்தில் ஒவ்வொரு ப்ளாஷ்பேக் விரியும்போதும் கதையில் கொஞ்சம் பழையத்தனம் இருப்பது மைனஸ். இருந்தாலும் என்கவுண்டர் எனும் அபாயம் எப்படிஎல்லாம் மனித உயிர்களை பலிகொள்கிறது என்ற அடிப்படைக் கருத்திற்கு சபாஷ்.

படத்தின் மிக முக்கிய பலம் வசனங்கள். தத்துவார்த்தமான அதே சமயம் லாஜிக்காக நடைமுறையில் பொருந்தக்கூடிய அற்புதமான வரிகள்.

என்கவுண்டர் போலீஸ் அதிகாரி விக்ரமாக மாதவன். பிரம்மாதம். ஷேவ் செய்யாத பத்து நாள் தாடியுடன் அழுக்கு ஷர்ட், பேன்ட் அணிந்து கேஷுவலாக துப்பாக்கியை சுழற்றிக் கொண்டே படம் முழுக்க வருவது அருமை. ரவுடிகளைத்தானே கொள்கிறோம் என்று நியாயத்துடன் வாழும் மாதவன் க்ளைமாக்ஸில் ஏற்படும் டிவிஸ்டால் ஒருங்கே ஏற்படும் குற்ற உணர்வையும், கோபத்தையும் துல்லியாமான நடிப்பில் பின்னியிருக்கிறார்.

கேங்க்ஸ்டர் வேதாவாக விஜய் சேதுபதி. அட்டகாசப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி இல்லையென்றால் இந்தப் படம் வெறும் விக்ரமாக மட்டுமே தான் இருந்திருக்கும். வடசென்னை தாதாவாக உயிருக்குப் பிரச்சினை வரும்போது கூட எந்தவித பதைபதைப்போ, பதட்டமோ துளியும் காட்டாமல் கேஷுவலாக நடந்து வருவது மிரட்டல். அதுவும் அறிமுகமாகும் முதல் காட்சியில் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டே நடந்து வரும்போது தியேட்டர் கிழிகிறது. கோபமாக பேசிக் கொண்டிருக்கும்போதே தம்பியைப் பற்றிய பேச்சு வரும்போது உடனே குரல் கம்முவதும், பிறகு சுதாரித்து இறுக்கமாக முகத்தை வைத்துக் கொள்வதும் மாஸ் கிளாஸ் நடிப்பு.

வரலஷ்மி, கதிர், ஷ்ரத்தா என அனைவரும் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். லாயராகவும், மாதவனுக்கு மனைவியாகவும் இரண்டு பரிமாணங்களில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷ்ரத்தா.

மாதவனின் போலீஸ் டீம், விஜய் சேதுபதியின் கேங்கஸ்டர் டீம் என அனைவருமே கேரக்டருக்குப் பொருந்திப் போகிறார்கள்.

ஷாமின் இசையும், பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங் நிஜமாகவே விக்ரமாதித்யன், வேதாளக் கதையை கேட்பது போலான அனுபவத்தை நமக்குத் தர கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ராஜேந்திரனின் ஆர்ட் இயக்கமும், சவுண்ட் டிபார்ட்மெண்டும் படத்தின் முக்கிய பலங்கள்.

மொத்தத்தில்

‘விக்ரம் வேதா’ – ரோலர் கோஸ்டர் ட்ரிப்.

 

You might also like More from author

%d bloggers like this: