‘வனமகன்’ – விமர்சனம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஷாயிஷா சைகல், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘வனமகன்’.

கதை

கோடீஸ்வர நாயகியான ஷாயிஷா தன் நண்பர்களுடன் அந்தமான் காட்டுக்குள் சுற்றுலா செல்ல, அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுவாசி ஜெயம் ரவி மீது இடித்து விபத்து ஏற்பட்டு அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதனால் அவரை சென்னைக்குக் கொண்டு வருகிறார் ஷாயிஷா. அதுவரைக்கும் காட்டுக்குள் இருந்த ஜெயம் ரவி சிட்டியில் செய்யும் அட்டகாசங்கள் ஷாயிஷாவின் வளர்ப்புத் தந்தை பிரகாஷ்ராஜுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது.  திடீரென ஜெயம் ரவியை கடத்திக் கொண்டு போகிறது அந்தமான் போலீஸ். அவரைத் தேடி தம்பி ராமையா துணையுடன் காட்டுக்குள் பயணம் செய்கிறார் ஷாயிஷா. அதன்பின் நடக்கும் அதிரடித் திருப்பங்களே மீதிக்கதை.

நாம் இதுவரைக்கும் பார்த்த ஹாலிவுட் டார்ஜான் படங்களை தொகுத்து முதல் பாதியையும், தமிழ்ப் படங்களில் வந்துள்ள காட்டு மக்களின் பிரச்சினைகளையும் தொகுத்து இரண்டாம் பாதியையும் தந்துள்ளார் இயக்குனர் விஜய். ஆனாலும் தனது அசத்தலான மேக்கிங்கினால் ஜெயித்துவிட்டார் விஜய். அந்தமான் போர்ஷனில் வரும் இயற்கைக் காட்சிகள் அபாரம். மொத்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் வஞ்சனையே இல்லாமல் அழகை அள்ளித் தெளித்துள்ளார்.

காட்டுவாசியாக ஜெயம் ரவி. படம் பார்க்கும் வரை எங்கே நம்மைப் படுத்தி எடுத்துவிடுவாரோ என்று பயத்தில் அமர்ந்தால் ‘’நான் திறமையான நடிகன்’’ என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டு நம்மை ‘பளார்’ என அடிக்கிறார் ஜெயம் ரவி. தன் கதாப்பாத்திரத்தை உணர்ந்து அளவாக, அடக்கமாக, ஷட்டிலாகவே நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். பேராண்மையை விட அதிகம் உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

படத்தின் நம்பர் ஒன் பலம் ஷாயிஷா ஷைகல்தான். இவர்தான் இனி தமிழ்நாட்டின் இளவரசி என்று சொன்னால் மிகையாகாது. பிரபுதேவாவையே மிஞ்சும் நடன அசைவுகள், துளிகூட பிசிறு தடுமாற்றம் இல்லாத நடிப்பு, முகபாவனை என எல்லா ஏரியாவிலும் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்கிறார் ஷாயிஷா. அசரடிக்கும் அழகும், அசத்தலான நடிப்பும் இவரால் மற்ற முன்னணி ஹீரோயின்கள் மார்க்கெட் சரிவது உறுதி.

தம்பி ராமையா வழக்கம்போல சில இடங்களில் கத்தினாலும் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் நெகிழவும் வைக்கிறார்.

பிரகாஷ்ராஜ். யானைப்பசிக்கு சோளப்பொறிதான். இருந்தாலும் ரசித்தே செய்திருக்கிறார். சண்முகப் பாண்டியன், வேல ராமமுர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பலர் நிறைவாக செய்துள்ளார்கள்.

படத்தின் வெற்றிக்கு போட்டி போட்டு உழைத்திருப்பது ஒளிப்பதிவாளர் திருதான். திருவிற்கு திருஷ்டி சுத்திப் போடுமளவிற்கு அட்டகாசமான மேக்கிங். அதுவும் பாடல் காட்சிகளில் நம்மையே அந்த இடத்திற்கு இழுத்துச் செல்கிறார்.

இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஐம்பதாவது படம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஏற்கனவே கேட்ட பாடலகளின் ஞாபகம் வந்தாலும் படம் முழுக்க நம்மை அதிர வைக்கும் இசையின் மூலம் எனர்ஜியோடு இருக்க வைக்கிறார். ஹீரோயின் ஓபனிங் பாடலும் ‘யம்மா தமிழம்மா’ பாடலும் மயக்க வைக்கும் ரகம்.

மொத்தத்தில்

‘வனமகன்’ – ‘வெற்றி’ மகன்.

You might also like More from author

%d bloggers like this: