‘மரகத நாணயம்’ – விமர்சனம்

பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பீலா விட்டு, பில்டப் காட்டும் படங்கள் மண்ணைக் கவ்வுவதும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் அறிமுக இயக்குனர்களின் படங்கள் அசத்தலாக இருப்பதும் தமிழ் சினிமாவில் சகஜம்தான். அப்படி இந்த வாரம் வெளியாகி அசத்தியிருக்கும் படம்தான் ‘மரகத நாணயம்’.

திருப்பூரிலிருந்து நாற்பது லட்சம் கடனை அடைக்க வேண்டி சென்னைக்கு வரும் ஆதி இந்த பெரிய தொகையை அடைக்க வேண்டுமானால் நிச்சயம் தப்பான வழியில்தான் முடியும் என்று துணிந்து தன் நண்பன் டேனியல் மூலம் முனீஸ்காந்த்திடம் சேர்கிறார். ஆனால் வயதான முனீஸ்காந்தோ சின்ன சின்ன அஸைன்மென்ட் கொடுக்க, இந்த திருட்டுக்களால் நாற்பது லட்சம் சம்பாதிக்க முடியாது என்று தெரிந்துகொண்ட ஆதி முனீஸ்காந்திடம் எதாவது பெரிய தப்பு செய்தால்தான் பெரிய அளவில் காசு பார்க்க முடியும் என்று வாக்குவாதம் செய்கிறார். அப்போது முனீஸ்காந்த் மரகத நாணயம் என்ற ஒன்று இருப்பதையும், அதைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்து கோடி பணம் கிடைக்கும் என்றும், ஆனால் அந்த மரகத நாணயத்தைத் தொட்டவர்கள் இறந்துபோயிருப்பதையும் சொல்ல, ஆதியும், டேனியலும் என்ன ஆனாலும் சரி என்று துணிச்சலாக மரகத நாணயத்தைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் நடக்கும் ரோலர் கோஸ்டர் சவாரியே இந்த ‘மரகத நாணயம்’.

‘சூது கவ்வும்’ பாணியில் புதிய கதை, வித்தியாசமான கதாப்பாத்திரங்கள், யூகிக்க முடியாத கதையோட்டம் ப்ளஸ் குபீர் சிரிப்பும், திடீர் திகிலும் கலந்த காக்டெயிலை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவண். அடுத்த சில படங்களில் நிச்சயம் முன்னணி இயக்குனர் சிம்மாசனத்தில் சம்மணம் போட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கதையின் நாயகனாக ஆதி. அளவான, அழகான பர்ஃபார்மான்ஸ். காதலியை நினைத்து உருகுவது, அவளின் அவல நிலையை நினைத்து கலங்குவது, கடனை அடைக்க உயிர் போகும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பது என இயல்பான நடிப்பின் மூலம் வெற்றி பெற்றுள்ளார். இனி இப்படியே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் ஆதிக்கு வரிசை கட்டி நிற்கும் வெற்றிப் படங்கள்.

நிக்கி கல்ராணிக்கு வாழ்நாள் படம் என்று சொன்னால் மிகையாகாது. படம் முழுக்க அவரின் உடல் மொழி, ஓசி குரலுக்கேற்ற வாய் அசைவும், முக பாவனையும் சான்சே இல்லை.

ராமதாஸ் நகைச்சுவை, குணச்சித்திரம் கலந்த இரண்டு விதமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார்.

டேனியல் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

காமெடி தாதா வேடத்தில் வரும் ஆனந்த்ராஜ் அனுபவ நடிப்பால் தியேட்டரையே அதிர வைக்கிறார்.

ஆனந்தராஜின் அடியாளாக முருகானந்தம், தமிழய்யாவாக தூய தமிழில் பேசி கலகலப்பூட்டும் சங்கிலி முருகன், சாதாரண சாமியார் என்ற ரேஞ்சில் அறிமுகமாகி தன் பலத்தைக் காட்டிய கோட்டா சீனிவாச ராவ், ‘பருத்திவீரன்’ பொணந்தின்னி குரலில் பேசி சிரிப்புக்கு உத்தரவாதமும் அளித்த அருண்ராஜா காமராஜ், நேர்மைக்கும், கதாபாத்திர கச்சிதத்துக்கும் உதாரணமான எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

இரண்டு சீன்களே வந்தாலும் நம்மை சிரிப்பால் கதற வைக்கிறார் பிரம்மானந்தா.

பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் இசையும் படத்தின் பெரிய பலம்.

எடிட்டர் பிரசன்னா ஜி.கே. எடிட்டிங் நறுக் கச்சிதம்.

மொத்தத்தில்

‘மரகத நாணயம்’ – படம் முழுக்க ஜொலிக்கிறது.

 

You might also like More from author

%d bloggers like this: