‘சத்ரியன்’ – விமர்சனம்

‘சுந்தர பாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், சௌந்தர ராஜா, அருள்தாஸ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘சத்ரியன்’.

திருச்சியில் தான் ஒரு தாதா என்பதே தன் பிள்ளைகளுக்கே தெரியாமல் வாழும் பெரிய தாதா சரத் லோகிஸ்த்வா எதிரியான அருள்தாசால் கொல்லப்படுகிறார். இதனால் அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருக்கிறார் சரத்தின் தளபதி விஜய் முருகன். சரத் மகளான மஞ்சிமா மோகன் காலேஜிற்கு செல்லும்போது ரவுடிப் பசங்கள் டார்ச்சர் கொடுப்பதால் விஜய் முருகன் தனது அடியாள் விக்ரம் பிரபுவை மஞ்சிமாவின் துணைக்கு அனுப்ப, நாளடைவில் மஞ்சிமாவிற்கு விக்ரம் பிரபு மீது காதல் வருகிறது. மஞ்சிமாவின் வற்புறுத்தலால் விக்ரம் பிரபுவும் காதலில் விழ, கடுப்பாகிறார் விஜய் முருகன். வேலியே பயிரை மேயக் கூடாது என்று விக்ரம் பிரபுவுக்கு புத்திமதி சொல்ல, அதனை விக்ரம் பிரபு மீற, இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. நிரந்தர எதிரியான அருள்தாஸ், தற்காலிக எதிரியான விஜய் முருகன் இருவரையும் எப்படி வெற்றிகொண்டு மஞ்சிமாவை கை பிடிக்கிறார் விக்ரம் பிரபு என்பதே மீதிக்கதை.

சுந்தர பாண்டியனில் உச்சம் தொட்டு, இது கதிர்வேலன் காதலில் சறுக்கி, சத்ரியனில் ஒரு சமநிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். என்னதான் பழைய கதையாக இருந்தாலும் ‘’கத்தி எடுத்தவன் கத்தியாலே சாக வேண்டிய அவசியம் இல்லை. திருந்தினால் நல்ல வாழ்க்கை உண்டு’’ எனும் அருமையான கருத்தை சொன்னதற்கே அவரைப் பாராட்டலாம்.

விக்ரம் பிரபு. அடர்ந்த தாடி, முறுக்கேறிய உடம்பு என அச்சு அசல் அடியாளாகவே மாறியிருக்கிறார். காதல் வயப்படும்போது கூட மீட்டர் தாண்டாமல் துல்லியமான ரிஎக்ஷன்களில் ‘அட’ போடவைக்கிறார்.

படத்தின் பெரிய பலம் என்று சொன்னால் மஞ்சிமா மோகன்தான். ‘கும்’ உடல்வாகுடன் திம்சு கட்டை திருச்சிப் பெண்ணாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவர் முகத்தில் இருக்கும் ஃப்ரஷ்னஸ் ‘வாவ்’ ரகம்.

விஜய் முருகன், அருள்தாஸ், சௌந்தர ராஜா, நரேன், சரத் லோகிஸ்த்வா போன்றோர் கச்சிதமான நடிப்பு.

ரியோஸ், ஐஸ்வர்யா தத்தா இருவரின் லவ் ட்ராக் எதற்கு என்றே தெரியவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பிஜிஎம் நிமிர வைக்கிறது.

சிவக்குமார் விஜயனின் கேமரா திருச்சியின் சந்து பொந்துகளையெல்லாம் இண்டு இடுக்குகளிலெல்லாம் பயணிக்கிறது.

வெங்கட் ராம் மோகன் எடிட்டிங்கில் இன்னும் நிறைய கத்தரித்திருக்கலாம்.

மொத்தத்தில்

‘சத்ரியன்’ – சாமானியன்

You might also like More from author

%d bloggers like this: