‘ரங்கூன்’ – விமர்சனம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி முதல் முதலாக இயக்கியிருக்கும் படம்தான் ‘ரங்கூன்’. இதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக், ஹீரோயினாக சனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் துவக்கக் காட்சியிலேயே ‘சிவாஜி’ ரஜினி மாதிரி கௌதம் கார்த்திக்கை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்ல, ‘’பொறக்கறது ஈஸி, சாவறது அதைவிட ஈஸி. ஆனா வாழறதுதான் இங்கக் கஷ்டம்’’ என்ற கௌதமின் வாய்ஸ் ஓவரில் கதை விரிகிறது. சிறுவயதின்போது பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்து சென்னையில் பர்மா நகர் எனப்படும் சிவகாமி நகரில் குடியேறுகின்றனர் கௌதமின் பெற்றோர். இங்கேயே உள்ள மற்ற அகதி நண்பர்களுடன் சேர்ந்து வளர்கிறார் கௌதம். பெரியவனான பிறகு ஒரு அடகு கடை நடத்தி வரும் பழைய கடத்தல்காரரிடம் வேலைக்கு சேர்கிறார். இவரது துடிப்பும், நேர்மையும், விசுவாசமும் அவருக்குப் பிடித்துவிட, தனது சொந்த மகனை போல பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் கௌதமின் துணை இருப்பதால் தன் பழைய தங்கக் கடத்தல் வேலையை ஆரம்பித்து பஜாரில் நம்பர் ஒன் இடம் பிடிக்க, முடிவெடுக்கிறார். அதன்படி கௌதம் தன் நண்பர்களுடன் தங்கக் கடத்தல் வேலைக்காக ரங்கூனுக்குச் செல்கிறார். அதன்பின் நடக்கும் துரோகம், குற்றம், வஞ்சம், பழிவாங்கலே மீதிக்கதை.

நிச்சயம் கௌதம் கார்த்திக்கு இதுதான் முதல் படம் என்று சொல்லுமளவுக்கு நடிப்பில் ஜொலிக்கிறார். என்ன அழுதுகொண்டே பேசும்போது அப்பாவின் குரலும், நடிப்பும் சாயல் அடிக்கிறது. இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள அவரது உழைப்பிற்கு ஒரு சல்யூட். இப்படியே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல இடத்தைப் பிடிக்கலாம்.

ஹீரோயினாக அறிமுகம் சனா. வழக்கமான பொறுக்கிப் பையனின் ஹீரோயிசத்தால் கவர்ந்து அவரைக் காதலிக்கும் அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயின் கேரக்டரில் நன்றாகவேப் பொருந்தியும் போகிறார். அந்த இரவு நேர லிப் கிஸ் சீன் செம.

தங்கக் கடத்தல் ஸ்மக்லராக மலையாள நடிகர் சித்திக் அசத்தல். அலட்டல் இல்லாத நடிப்பு. தமிழ் சினிமாவிற்கு இவர் இன்னொரு சச்சின் கடேகர்.

கௌதமின் நண்பர்களாக லல்லு, டேனியல், மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு. குறிப்பாக லல்லுவிற்கு இந்தப் படம் நிச்சயம் அடுத்த கட்ட நகர்வுதான். மணிவண்ணனும் சில இடங்களில் கலங்க வைக்கும் நடிப்பால் நம்மை கவர்கிறார்.

அனீஸ் தருன்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஜி.கே.பிரசன்னாவின் ‘ஷார்ப்’ எடிட்டிங், விஷால் சந்திர சேகரின் ‘விறுவிறு’ பிஜிஎம் மூன்றும்தான் ரங்கூனின் பலமான தூண்கள். இவற்றில் ஏதோ ஒன்று மிஸ் ஆகியிருந்தாலும் படத்தின் வெற்றி கொஞ்சம் நழுவியிருக்க வாய்ப்பு அதிகம்.

விக்ரமின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.

ராஜ்குமார் பெரியசாமி. முருகதாசின் உதவியாளராக இருந்துகொண்டே கே.வி.ஆனந்த் ஸ்டைலில் படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். பல இடங்களில் படம் அயனை ஞாபகப்படுத்துகிறது. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் அச்சு அசல் ‘அயன்’ இன்டர்வல் ப்ளாக். இருந்தாலும் நம்மை ஒரு சீனில் கூட நெளிய வைக்கவோ, சோர்வடைய வைக்கவோ இல்லாமல் ‘பரபர’ திரைக்கதையாலும், நேர்த்தியான டைரக்ஷ்னாலும் நிச்சய வெற்றிப் படம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. வடசென்னையின் கடத்தல் பிஸினஸ் நெட்வொர்க்கின் பின்னணியை சொல்வதற்கு இவர் செய்திருக்கும் ரிசர்ச் அபாரம். வாழ்த்துகள் ராஜ்குமார் பெரியசாமி.

மொத்தத்தில்

‘ரங்கூன்’ –  என்ஜாய் பண்ணலாம்.

You might also like More from author

%d bloggers like this: