‘ஒரு கிடாயின் கருணை மனு’ – விமர்சனம்

படத்தின் தலைப்பையும், போஸ்டர் டிசைனையும் பார்த்துவிட்டு, கூடவே உலக விழாக்களில் விருதுகளை குவித்த படம் என்ற தகவலும் தெரிந்துகொண்டு விட்டதால் ஏதோ டம்ளர் நிரம்ப நமக்கு கண்ணீரை வரவழைக்கும் கலைப்படமாக இருக்கும் என்று கனத்த மனதோடு படம் பார்க்க அமர்ந்தால், இதுவரைக்குமே நாம பாக்காத ஃப்ரெஷ்ஷான கதை, அதிலயும் சீன் பை சீன் அதிகரிச்சுக்கிட்டேப் போகும் விறுவிறுப்பு, நக்கல், நையாண்டி, பதட்டம், மனித நேயம், ஒரே லோக்கேஷன்ல முழு படமும் இருந்தாலும் ஒரு ஷாட் கூட நமக்கு அலுப்பே வராத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை, பாசாங்கே இல்லாத நேட்டிவிட்டி வசனங்கள், கதாப்பாத்திரங்களின் தத்ரூபமான நடிப்புன்னு படம் முழுக்க ஒரு ‘இயக்க’த் திருவிழாவே நடத்தியிருக்கார் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா.

இதுதான் கதை. புதிதாக திருமணமான விதார்த் தம்பதி தன் சொந்த பந்தம் ப்ளஸ் அக்கம்பக்கத்து வீட்டாருடன் குலதெய்வ கோயிலுக்குக் கிடா வெட்டி சாமி கும்பிட ஒரு பலி ஆட்டைக் கூட்டிக் கொண்டு புறப்படும் பத்தாவது நிமிஷமே நம்மை உற்சாகமும், பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது. விதார்த்தின் தெரியாத்தமான விபத்து மூலம் நடந்த உயிர் பலியால் அனைவருமே பதறுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் சுதாரித்துக் கொண்டு விதார்த்தை அந்த கொலைப்பழியிலிருந்துக் காப்பாற்ற அந்த கிராமமே போராடுவதுதான் மொத்தப் படமும்.

முதல் படத்திலேயே இயக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும் சுரேஷ் சங்கையாவை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

இயக்குனருக்கு அடுத்து நாம் கை தட்டிப் பாராட்ட வேண்டியது ஹீரோ விதார்த்தை. அப்பா… இப்படியொரு திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்து, அதன் தன்மையை புரிந்துகொண்டு  நடித்ததற்கே ‘சல்யூட்’ அடிக்கலாம். அதுவும் தனக்கு மட்டும் இல்லாமல் படத்தில் வரும் நண்டு சிண்டு கேரக்டர்களுக்குக் கூட வழிவிட்டும், தன் கேரக்டரின் அருமை உணர்ந்து ஷட்டிலாக நடித்திருப்பதும் ‘கிரேட்’ விதார்த். ‘குற்றமே தண்டனை’யில் பெற வேண்டிய வெற்றியை இந்தப் படத்தில் இரண்டு மடங்காகப் பெற்றிருக்கிறார்.

விதார்த்தின் புதுப் பொண்டாட்டியாக ரவீணா. பாந்தமான அழகுடன் நடிப்பிலும் நம்மை ஈர்க்கிறார்.

ஆரஞ்சு மிட்டாயில் ஆம்புலன்ஸ் டிரைவராக வந்து நம்மை கிச்சு கிச்சு மூட்டிய ‘அட்டைக்கத்தி’ ஆறுமுகம் இதில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்து, சீனுக்கு சீன் சிரிப்பு சிக்சர்களாக அடிக்கிறார். வெற்று உடம்புடன், அசால்ட் உடல் மொழியுடன் காத்து வாங்க இவர் பேசும் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் ஆரவாரம்.

அடுத்து லாரி டிரைவராக நடித்திருப்பவர் அட்டகாசமான நடிப்பின் மூலம் அசர வைத்துள்ளார். இயலாமை, கோபம், சூழ்நிலை புரிந்து கொண்டு அனுசரித்துப் போகும் அப்பாவித்தனம் என பல பரிமாணங்களில் சிறப்பாற்றியிருக்கிறார்.   

‘கட்டெறும்பு’க்கு இது நிச்சயம் பேர் சொல்லும் படம் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் க்ளைமாக்ஸில் கோர்ட்டில் ஜட்ஜ் இவரைத் திட்டும்போது இவர் தரும் ரியேக்ஷனில் தியேட்டரில் ‘கிழிகிழி’.

இவர்களைப் போலவே கிடைத்த கேப்பிலெல்லாம் ஸ்கோர் பண்ணுவது ஆர்ட் டைரக்டர் வீரசமர்தான். லாரி டிரைவரின் உடல் மொழி, பேச்சு மொழி, நடை, உடை, முகபாவனை என அனைத்திலும் பின்னிப் பெடலெடுத்துள்ளார். அதுவும் ஒரு சீனில் விதார்த் இவரை திடீரென கன்னத்தில் அறைய, பொறி கலங்க இவர் காட்டும் அதிர்ச்சி ரியேக்ஷன் சான்சே இல்லை. வெல்கம் வீரசமர்.

இவர்கள்தான் என்றில்லை. படத்தில் நடித்த ஆடு முதல் கோழி வரை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தத்ரூபமாக நடித்துள்ளார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதுச் சாலப் பொருந்தும்.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நூலிழை தவறியிருந்தால் கூட படத்தின் மொத்த சாராம்சமும் கெட்டுப் போயிருக்கக்கூடும். ஆனால் அதன் பொறுப்பை உணர்ந்து, இயக்குனரின் ‘பருப்பை’ வேக வைத்துவிட்டார்கள் ஒளிப்பதிவாளர் R.V.சரணும், எடிட்டர் K.L.பிரவீனும்.

ரகுராமின் இசையில் பாட்டும், பின்னணி இசையும் நேர்த்தி.

மொத்தத்தில்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ – வெற்றித் திருவிழாக் கொண்டாட்டம்.

You might also like More from author

%d bloggers like this: