‘பிருந்தாவனம்’ – விமர்சனம்

‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற தரமான படங்களை இயக்கிய ராதா மோகனும், ‘மௌன குரு’, ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’ போன்ற நல்ல கதைப் படங்களை தேர்வு செய்யும் அருள்நிதியும் இணைந்திருக்கும் படம்தான் ‘பிருந்தாவனம்’.

ஊட்டியில் கதை ஆரம்பிக்கிறது. அந்த ஏரியா மக்களின் அனைத்து வேலைகளையும் தன் வேலைகளாக எடுத்துச் செய்யும் செல்லப்பிள்ளை அருள்நிதி வாய் பேச முடியாத, காது கேளாதவர். சலூனில் வேலை பார்ப்பவரான அவர் நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். ஒருமுறை ஊட்டிக்கு வரும் விவேக்குடன் நட்பாகும் சூழல் வருகிறது. அருள்நிதியின் அப்பாவி குணத்தால் அவர் மீது அதிகமாகவே பாசம் செலுத்துகிறார் விவேக். அதே சமயத்தில் அருள்நிதியின் சிறு வயது தோழியான தான்யா அருள்நிதியை காதலிக்கும் விஷயத்தை சொல்ல, ஒரேடியாக மறுக்கிறார் அருள்நிதி. தான்யாவின் லவ் டார்ச்சர் அதிகமாக, விவேக்கும் தான்யாவின் காதலை அருள்நிதியிடம் வலியுறுத்த, அப்போதுதான் அருள்நிதி வாய் பேசக்கூடியவர் என்ற ஒரு உண்மை வெளிப்படுகிறது. இத்தனை நாள் ஏன் அருள்நிதி ஊமை போன்று நடித்தார், தான்யாவின் காதலை ஏன் ஏற்க மறுக்கிறார், தான்யாவின் காதல் என்னவானது என்பதே மீதிக்கதை.

‘மொழி’ படத்தில் எப்படி வாய் பேசாத, காது கேளாத நபரின் உள்ளுணர்வை நுணுக்கமாக சித்தரித்தாரோ அதேபோல் இதிலும் அருள்நிதி கேரக்டர் மூலம் அவர்களின் இயல்பான உணர்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன். வாய் பேசாத சிறுவனின் பாதுகாப்பற்றத் தன்மை, வாய் பேசும் உண்மையால் எங்கே தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் கொண்ட ஒருவனின் கேரக்டரை வைத்து கதை பின்னியுள்ளார். விரசம், ஆபாசம், டபுள் மீனிங் போன்ற சில்லித்தனங்கள் இல்லாமல் தன் ஸ்டைல் ஒன்லைன் காமெடி வசனங்களால், நெகிழ்வான உணர்வுகளால் பிருந்தாவனத்தை வசந்தமாக்கியுள்ளார்.

அருள்நிதிக்கு இந்தப் படம் நிச்சயம் நடிப்பில் மைல்கல் என்றே சொல்லலாம். படத்திற்கு படம் நடிப்பில் முன்ன்றிக் கொண்டே செல்கிறார். வாய் பேச முடியாத, காது கேளாதவர்களின் முக பாவம், உடல் மொழி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

தான்யாதான் இந்தப் படத்தின் அழகான சர்ப்ரைஸ். இப்படி ஒரு துருதுரு ஹீரோயின் கேரக்டரை பார்த்து, ரசித்து எவ்வளவு நாளாச்சு. தான்யாவின் குறும்பும், இளமை அரும்பும் நம்மை ரசிக்க வைக்கிறது.

நடிகர் விவேக்காக விவேக். கதையின் தன்மைக்காகவே நடிகர் விவேக்காகவே வந்துள்ளது சிறப்பு. நீண்ட நாளைக்கு பிறகு விவேக்கின் காமெடி சிரிக்க வைத்துள்ளது படத்தின் சிறப்புகளில் ஒன்று.

டவுட் செந்தில், செல் முருகனும் நம்மை சிரிக்க வைப்பதில் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் போன்றோர் ஏற்கனவே பழைய ராதாமோகனின் படங்களில் பார்த்த கேரக்டர்களே என்பதால் இதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

படத்தின் மிகப் பெரிய பலமே பொன் பார்த்திபனின் நச் நச் வசனங்கள்தான். படம் முழுக்க தனது ஒன்லைன் வசனங்களால் தியேட்டரை தெறிக்க விடுகிறார்.

விஷால் சந்திர சேகரின் இசையில் ஊட்டியில் தாலாட்டு கேட்கும் சுகம். எம்.எஸ்.விவேக்கின் ஒளிப்பதிவு அழகான கவிதை.

மொத்தத்தில்

‘பிருந்தாவனம்’ – நகைச்சுவை நந்தவனம்

You might also like More from author