‘தொண்டன்’ – விமர்சனம்

அறிவுரை ப்ளஸ் அஹிம்சை அக்மார்க் சமுத்திர கனி படம்தான் இந்த ‘தொண்டன்’.

சாகக் கிடப்பது எதிரியாக இருந்தாலும் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் வில்லனின் எதிரியின் உயிரைக் காப்பாற்றி, அவனின் கோபத்திற்கு ஆளாகிறார். வழக்கம்போல் உள்ளூர் அரசியல்வாதியால் என்ன என்னவெல்லாம் டார்ச்சர் அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தாரின் உயிரையே பலி கொடுக்கப் போய் அதிலிருந்து மீளும் சமுத்திரக் கனியை வில்லன் துரத்தி, துரத்தி அடிக்க, ஓடிக் கொண்டிருக்கும் சமுத்திரக் கனி ஒரு கட்டத்தில் திரும்பி நின்று ரிவர்ஸ் ரிவெஞ்ச் எடுக்க, விளைவு வில்லனின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. ஆனால் அவனது உயிரையும் தன் ஆம்புலன்சில் கொண்டுபோய் காப்பற்றுவதோடு முடிகிறது படம்.

படம் முழுக்க சமுத்திரக் கனியின் ஆதிக்கம்தான். இயக்குனர் சமுத்திரக்கனியும், நடிகர் சமுத்திரக்கனியும் போட்டிபோட்டு வேலை செய்திருக்கின்றனர். ‘அறம் செய்ய விரும்பு’ பார்முலாவில் வாழும் சமுத்திரக்கனி தங்கையை டார்ச்சர் கொடுக்கும் நண்பன் விக்ராந்தை திருத்தி, நல்வழிப்படுத்தி, தன் தங்கைக்குப் பொருத்தமானவனாக மாற்றும் நேர்மையும், மனிதமும் நச். தன் எதிரியை பழிவாங்க அவன் எதிரி கூப்பிட, அவனுக்கே பாலபாடம் நடத்துவது சமுத்திரக்கனி டச்.

விக்ராந்த். கிடைத்த கேரக்டர் சின்னதா இருந்தாலும் சரியாக, நேர்த்தியாக செய்திருக்கிறார்.

சுனைனா. இவ்வளவு அழகு சுனைனாவை இதுவரை இண்டஸ்ட்ரியே பார்த்ததில்லை. பாந்தமான அழகியாக அசத்தியுள்ளார்.

அர்த்தனா. தமிழ் சினிமாவிற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஸ்ரீதிவ்யா என்றால் மிகையல்ல. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் பிசிறில்லாத நடிப்பு.

வேல.ராமமுர்த்தி, நமோ நாராயணன், கு.ஞானசம்பந்தம், சவுந்தர் ராஜன் என எல்லோருமே மனதில் நிற்கிறார்கள்.

படம் முழுக்க கஞ்சா கருப்பின் காமெடி நிஜமாகவே சிரிக்க வைக்கிறது. க்ளைமாக்சில் மட்டும் வரும் சூரியும், தம்பி ராமையாவும் தெறிக்க விடுகிறார்கள் தியேட்டரை.

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும், பின்னணி இசையும் தொண்டனின் பலம்.

ஏகாம்பரம், ரிச்சர்ட் எம் நாதன் இருவரின் ஒளிப்பதிவும் அலாதி சுகம்.

மொத்தத்தில்

‘தொண்டன்’ – நவீன வள்ளுவன்

You might also like More from author

%d bloggers like this: