‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – விமர்சனம்

ஹாரர் படம், காமெடி படம், ஹாரர் காமெடி படம், காமெடி ஹாரர் படம் என வெள்ளிக்கிழமையானால் ஹாரர் படமோ, காமெடி படமோ, இல்லை ஹாரர் காமெடி படமோ அல்லது காமெடி ஹாரர் படமோ ரிலீசாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் படங்களில் காமெடியோ அல்லது ஹாரரோ, ஹாரரோ அல்லது காமெடியோ, இல்லை காமெடி ஹாரரோ அல்லது ஹாரர் காமெடியாகவோ இருக்குமென்று எதிர்பார்த்துப் போனால் அதில் காமெடியும் இல்லாமல் ஹாரரும் இல்லாமல் அல்லது ஹாரர் காமெடியும் இல்லாமல் அல்லது காமெடி ஹாரரும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்.. என்னங்க தலைசுத்துதா… வேற ஒண்ணுமில்லை படம் எவ்வழி விமர்சனமும் அவ்வழியே..

அதாவது சின்ன வயசிலிருந்தே வாடகை வீட்ல இருக்குறதால தொடர்ந்து அவமானப்பட்டுக்கொண்டே வளர்றாறு நம்ம ஜீவா. அவங்க அம்மா ராதிகா சரத்குமார். ஜீவாக்கிட்ட அம்மா ஒரே ஒரு ஆசையை சொல்றாங்க. ‘’அதாவது நீ சொந்தமா ஒரு வீடு கட்டியோ அல்லது ரெடிமேடாகவோ அந்த வீட்ல என்னை உக்கார வைக்கணும்’’னு. உடனே பல முயற்சிக்கு அப்புறமா ஒரு பெரிய கிராமத்து வீட்டுக்கு சொந்தமா வாங்கி அதுல குடி போறாங்க. ஆனா அந்த வீட்ல பேய் சுத்துதுன்னு பல பேர் வாங்காம இருந்த வீடு அது. அதுல என்ன டிவிஸ்டுனா அந்த வீட்ல ஏற்கனவே தம்பி ராமையா அவரோட குடும்பதோட வாழ்ந்துட்டு வர்றாரு. இதனால் ரெண்டு குடும்பத்துக்கும் இந்த வீடு யாருக்குச் சொந்தம்னு பிரச்சினை ஆகுது. அதே சமயம் இன்னொரு உண்மையும் தெரிய வருது. அதாவது இத்தன நாளா இந்த வீட்ல பேய் இருக்குன்னு சொன்னதெல்லாம் வதந்தின்னும், அந்த வதந்தியைக் கிளப்பிவிட்டதே நம்ம ஜீவாவுன்னும் தெரிது.. இதனால் கோவிச்சுட்டு குடும்பத்தோட காலி பண்ணிட்டுப் போயிடுறாரு.. அவரோட பொண்ணுதான் ஸ்ரீதிவ்யா. இவங்கப் போனப்புறந்தான் ஜீவாவுக்கும் அவரோட நண்பன் சூரிக்கும் அந்த வீட்ல நிஜமாவே பேய் இருக்குன்னு தெரிய வருது.. இதுக்கு மேல என்ன நடக்கும்னு நீங்களே யூகிச்சுக்குங்க…

ஜீவா. இந்தப் படமாவது நமக்கு ஹிட்டாகனும்னு கடினமா உழைச்சிருக்காரு. அவரோட வழக்கமான நையாண்டி கொஞ்சம் கம்மியாவே இருந்தாலும் ரசிக்கத்தான் வைக்கிறாரு.

ஜீவாவோட நண்பனா சூரி. இவருக்கு காதல் ட்ரேக்கும் இருக்கு படத்துல. மத்த படங்கள் மாறி நம்மள நெளிய விடாம ஓரளவு சிரிப்பு வர்ற மாதிரியே நடிச்சிருக்காரு.

அழகுப் பதுமையா ஸ்ரீதிவ்யா. இந்தப் படத்துல ஃபிரஷ்ஷாவே இருக்காங்க… மத்தபடி பெரிய வேலையெல்லாம் ஒண்ணுமில்ல இவங்களுக்கு…

படத்துல செம ஸ்கோர் பண்ணுவது ராதாரவியும், ராதிகா சரத்குமாரும்தான். அதுவும் ப்ளாஷ்பேக்குல நெகிழ வைக்கிற ராதாரவி லைவ்ல பேயா செம மிரட்டல்.

எத்தனைப் படங்கள்ல அம்மா ரோல் பண்ணாலும் நமக்கு சலிக்கவே சலிக்காத ஒரே நடிகை ராதிகா மட்டும்தான்னு நிச்சயமா சொல்ல முடியும்.

மத்தபடி தம்பி ராமையா, கோவை சரளா, மயில் சாமி, சரவண சுப்பையா, கவுசல்யா மற்றும் பலர் நடிச்சிருக்காங்க.

இயக்குனர் ஐக். கமல்ஹாசன், பிரியதர்ஷன்ட்ட வேலை பார்த்தவரு. ஆனா ஸ்கிரிப்ட் லெவல்ல ஒரு ஸ்ட்ரக்சரே இல்லாமல் இருந்ததுதான் படத்தையே பலவீனமாக்குது. காமெடி வந்தா தொடர்ந்து காமெடி சீனா வருது.. (அதுக்கெல்லாம் சிரிப்பு வருதாங்கிறது வேற விஷயம்), இல்ல லவ் சீனாவே வருது… ஒரு கட்டத்துல இது பேய் படம்ங்கிறதே நமக்கு மறந்துபோயிடுது… அதே மாறி பேமிலி பொழுதுபோக்கு படத்துல வர்ற டபுள் மீனிங் டயலாக்ஸ் இருந்தா எப்படி பேமிலியோட தியேட்டருக்கு வர்றவங்க ரசிப்பாங்க. நெளியத்தான செய்வாங்க…

இருந்தாலும் குடும்ப உறவுகள் ஒற்றுமையா இருக்கணும்னு சொன்ன அந்த மெசேஜ்க்காக மனதாரப் பாராட்டலாம் ஐக்கை.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கு இந்தப் படத்துல அவ்வளவா வேலை இல்லை. இருந்தாலும் ஒன்றிரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

ஒளிப்பதிவும் பேய் படத்துக்குன்னு தனி சிரத்தை எடுத்திருக்கிறது தனியா தெரியுது…

மொத்தத்துல

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – ‘சீக்கிரம் கதவ தொறடா’ (ஆடியன்ஸ் மைன்ட் வாய்ஸ்).

You might also like More from author

%d bloggers like this: